ADDED : டிச 07, 2024 09:08 AM

குதிரையின் மொத்த எடையையும் தாங்கும் பகுதி என்றால் அது காலில் உள்ள குளம்பு தான். இது, நமக்கு விரலில் இருக்கும் நகம் இருப்பது போன்ற அமைப்பு. இப்பகுதி கடினமாக இருந்தாலும் மிகவும் 'சென்சிட்டிவ்'வானது. வேகமாக ஓடும் குதிரையின் குளம்பு தேயாமல் இருக்க லாடம் கட்டுவர். 45 நாட்களுக்கு ஒருமுறையாவது, குளம்பு பகுதியை வெட்டி விட வேண்டும். தினசரி குழம்பை சுற்றியிருக்கும் மண், அழுக்குகளை நீக்கிவிடுவது அவசியம்.
குதிரை சாணத்தில் பூஞ்சை, பாக்டீரியாக்கள் இருப்பதால், நீண்ட நேரம் அதை மிதித்து கொண்டு நின்றால் குளம்பு பகுதியில் தொற்று ஏற்படலாம். பொதுவாக, 'கேன்டிடா' என்ற பூஞ்சை தொற்று குதிரைகளின் குளம்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். குதிரையால் நீண்டநேரம் நிற்க முடியாது. பாதிக்கப்பட்ட கால் தரையில் படாமல் துாக்கியபடி நிற்றல், நடக்க முடியாமல் அவதிப்படுதல், சாப்பிடாமல் இருந்தல் போன்றவை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்.
குளம்பு பகுதியில் வெள்ளையாக படர்ந்திருத்தல், கருப்பாக இருத்தல், பச்சை அல்லது மஞ்சள் கலந்த நிறத்துடன் 'சீல்' வைத்து, அதில் துர்நாற்றம் வீசினால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். முறையான சிகிச்சையால், அதிகபட்சம் இரு வாரங்களில் குணப்படுத்திவிடலாம். இதேபோல, கார்போஹைட்ரோட் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட கொடுத்து, எந்த பயிற்சியும் இல்லாமல் இருந்தால் 'லாக்டிக் ஆசிட்' உருவாகி, குளம்பு பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் கால் வீக்கம் ஏற்படலாம் என்பதால், 'டயட்' முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- இ. ஆதில், கால்நடை உதவி மருத்துவர், பொள்ளாச்சி.