ADDED : ஆக 31, 2024 11:02 AM

''ஒரு நாயிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை மறைத்து அதன் தனித்தன்மையை வெளிப்படுத்தி காட்சிப்படுத்துவதோடு, நடுவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் தான், வெற்றிக்கான சூட்சமமே ஒளிந்திருக்கிறது,'' என்கிறார் கோவையை சேர்ந்த, 'டாக் ஹேண்டுலர்' சூர்யா.நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில் பிசியாக இருந்த இவரை நேரில் சந்தித்தோம். கண்காட்சிகளுக்கு நாய்களை தயார்ப்படுத்துவதில் ஒரு ஹேண்டுலருடைய பங்களிப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:உடலமைப்பு, தனித்திறன் பொறுத்து,'பெடரேஷன் சினோலாஜிக் இன்டர்நேஷனல்' என்ற உலகளாவிய அமைப்பு, 360 வகை நாய்களை அடையாளப்படுத்தியுள்ளது. இதன் வகைப்பாட்டை தான், 'கென்னல் கிளப் ஆப் இண்டியா' போன்ற பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் பின்பற்றுகின்றன.
இதில் ஒவ்வொரு வகை பப்பியும், பல் வரிசை , கால் அளவு, முக அமைப்பு, கழுத்து, உடலமைப்பு, எடை, உயரம் எப்படியிருக்க வேண்டுமென்ற வரையறை உள்ளது. இதை பின்பற்றி, நாய்களை எப்படி பழக்கப்படுத்த வேண்டுமென்ற வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயிற்சி அளிக்கும் போது தான், ஒரு குறிப்பிட்ட வகை நாயின், தனித்திறன் வெளிப்படுத்த முடியும். இதை பின்பற்றாவிடில், 'ஒரிஜினல் பிளட் லைன்' ஆக இருந்தாலும், அதற்குரிய திறன் இருக்காது. இந்த கணக்கீட்டின் படி இல்லாமல், சிறு சிறு குறைகள் ஒரு நாயிடம் இருந்தாலும், அதை மறைத்து, அதன் தனித்திறனை மிகைப்படுத்தி வெளிப்படுத்த செய்வது, ஒரு ஹேண்டுலரின் கையில் தான் உள்ளது.
உங்கள் ஹேண்டுலிங் ஸ்டைல் பற்றிபப்பிக்கு 3-4 மாதமாக இருக்கும் போதே, கண்காட்சியில் பங்கேற்க செய்வதற்கான பயிற்சியை துவங்கலாம். பெல்ஜியம் மலினோய்ஸ், டாபர்மேன், பாக்ஸர், கிரேட்டேன், ராட்வீலர், மின்பின், டாஸ் ஹவுண்ட், ஹஸ்கி, பீகில் என நிறைய ப்ரீட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். ஒவ்வொரு ப்ரீடையும், அதற்குரிய முறைப்படி, கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டும். இதற்கு, ஒவ்வொரு ப்ரீட் சார்ந்த பல்வேறு தகவல்களை உள்வாங்கி, குறிப்பிட்ட பப்பியின் நிறை, குறைகளை அறிவது அவசியம். ஒருமுறை நம்பிக்கை ஏற்படுத்திவிட்டால், நாம் என்ன சொன்னாலும் நாய்கள் கேட்கும். அவை அக்ரசிவ் ஆவதற்கு, வளர்ப்பு முறை தான் காரணம்.
நாய் வளர்ப்பில் செய்யும் தவறுகள் என்ன?
பொதுவாக நாய் ஒரு வேட்டை விலங்கு. இதை நம் தேவைக்காக பழக்கப்படுத்தி வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். இதற்காக, அதீத செல்லம் கொடுப்பது, அதிக உணவு கொடுத்து ஒபீசிட்டியாக்குவது, முறையாக பராமரிக்காமல் இருப்பது, தடுப்பூசி போடுவதை தவிர்ப்பது போன்றவை செய்யக்கூடாது. கண்காட்சி நோக்கத்திற்காக அல்லாமல், வீட்டிலே பப்பி வளர்த்தாலும், சில சில அடிப்படை பயிற்சிகள் வழங்கினால், அது நமக்கான வேலையை செய்யும் சேவகனாகும்.