ADDED : ஏப் 05, 2025 06:13 AM

பப்பி கருதரிக்க தயாராகும் பருவத்தில், அதன் பிறப்புறுப்பில் இருந்து சிறிது ரத்தம் சொட்டு சொட்டாக வெளியேறும். இதற்கு பின், இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்காத பட்சத்தில் வயிறு பகுதி பெரிதானால், அது பயோமெட்ரா (Pyometra) பாதிப்பாக இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்களால், சில பாக்டீரியாக்களின் தாக்கத்தில், கர்ப்பப்பையில் சீழ் (அழுகிய திரவம்) பிடித்திருக்கும்.
இது திறந்த நிலையில் இருந்தால், பிறப்புறுப்பில் இருந்து, சீழ் வெளியேறி கொண்டே இருக்கும். பப்பியிடம் துர்நாற்றம் வீசுவதால், பிறப்புறுப்பில் பாதிப்பு இருப்பதை அறியலாம். மூடிய நிலை பயோமெட்ராவாக இருந்தால், ஸ்கேன் செய்து தான் உறுதி செய்ய முடியும்.
உடல் வெப்பம் அதிகரித்தல், சாப்பிடாமல் சோர்வுடன் காணப்படுதல், அதிக தாகம், அடிக்கடி மலம் கழித்தல், உடல் எடை குறைதல், வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கும். மூடிய நிலை பயோமெட்ரா பாதிப்புக்கு, அறுவை சிகிச்சை வாயிலாக கர்ப்பப்பையை நீக்குவது மட்டுமே தீர்வாகும்.
திறந்த நிலை பயோமெட்ரா அறிகுறியாக இருந்தால், ஓமியோபதி மருத்துவத்தில், பிரத்யேக மருந்துகள் உள்ளன. இதை 20 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால், குணமாகிவிடும். மீண்டும் ஸ்கேன் எடுத்து, இதை உறுதி செய்து கொள்ளலாம்.
பயோமெட்ரா வராமல் தடுக்க, இனப்பெருக்கத்திற்கு தயாராகும் பருவத்தில் இருந்து இரு மாதங்கள் வரை, பப்பியை நன்றாக பராமரிக்க வேண்டும். இனவிருத்தி தேவை இல்லாத பெண் நாய்களுக்கு, கர்ப்பப்பை எடுத்துவிடலாம்.
- ஏ.வி. ஜோசப் அய்யாதுரை,
கால்நடை மருத்துவர்,திருமங்கலம், மதுரை.

