ADDED : ஜூலை 18, 2025 10:02 PM

'சிறிய வகை பப்பிகளின் ராஜா' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும், மினியேச்சர் பிஞ்சர், கண்காட்சியில் மட்டும், டாபர்மேன், கிரேட்டேன் போன்ற பெரிய வகை நாய்களுடன் மல்லுக்கு நிற்கிறது. இதன் தனித்துவம் பற்றி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ப்ரீடர் ரஞ்சித்திடம் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
மினிபின் என செல்லமாக அழைக்கப்படும் மினியேச்சர் பிஞ்சர், சிறிய வகை நாய். இது, அதிகபட்சம் 13 இஞ்ச் உயரம், 5 கிலோ வரை எடை கொண்டது. சராசரியாக, 12-17 ஆண்டுகள் உயிர்வாழும்.
சிறிய இடத்தில் கூட இதை வளர்க்கலாம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நன்கு விளையாடும். இதை கட்டி போட்டு வைக்க கூடாது.
வீட்டிற்குள் தனியாக இருப்பவர்களுக்கு ஏற்ற துணையாக இது இருக்கும். உரிமையாளரை பாதுகாப்பதையே,குறிக்கோளாக கொண்டிருக்கும். புதிய ஆட்கள் எளிதில் வீட்டிற்குள் நுழைய முடியாது.
சிறியதாக இருப்பதால், இதை வாக்கிங் அழைத்து செல்வதில் சிரமம் இருக்காது. மென்மையான முடிகள் இருப்பதால், பராமரிப்புக்கு மெனக்கெட வேண்டியதில்லை.
எல்லா தட்பவெப்ப சூழல்களுக்கும் தகவமைத்து கொள்ளும். பிறந்து ஓராண்டுக்கு பின் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். இதன் குட்டிகள், நம் உள்ளங்கை அளவே இருக்கும்.
அதீத சுறுசுறுப்புடன் இருப்பதால், குழந்தைகள் இருக்கும் வீட்டில், முறையாக பயிற்சி அளிக்காமல், இதை வளர்க்க கூடாது. எதையும் எளிதில் கற்று கொள்ளும் என்பதால், சிறியதாக இருக்கும் போதே பயிற்சி அளிப்பது அவசியம்.
இதன் உருவத்தை பார்த்து எடை போடக்கூடாது. அதீத ஆற்றல் கொண்ட, பெரிய வகை நாய்களான, டாபர்மேன், கிரேட்டேன், பாக்ஸர் போன்றவற்றுடன், கண்காட்சிகளில் மல்லுக்கு நிற்கும்.
டாபர்மேன் நாயிடம் காணப்படும், பல தனித்துவ குணங்கள், மின்பின் பப்பியிடமும் காணலாம். உருவத்தை தவிர, பெரிய மாற்றங்கள் இவைகளிடம் காண முடியாது.
மேல்நோக்கிய காது, சற்று நீண்ட கண்கள், சிறிய வால் என, வித்தியாசமான உடலமைப்பை கொண்ட மின்பின் பப்பி, உங்களுடன் இருந்தால், சுட்டித்தனமான குழந்தையின் சேட்டையும், போர்வீரனின் தற்காக்கும் ஆற்றலையும், ஒருங்கே காண முடியும், என்றார்.