ADDED : மார் 09, 2024 08:26 AM

செல்லப் பிராணிகள் உயிரோடு உறவாக கலந்துவிட்ட பந்தம் என்றால் மிகையல்ல. செல்லப்பிராணிகளின் மறைவு, பிரிவு என்பது, அதை செல்லமாய் பார்த்துக் கொண்டோரின் மனதை மிக ஆழமாகவே வருந்த செய்கிறது. அந்த பிரிவின் வலியாற, சில மாதங்கள் கூட பிடிக்கிறது. இந்த பிரிதல் உணர்வு, ரணம் தராமல் இருக்க, உயிரோவியம் மூலம் நிவாரணம் தேடிக் கொள்கின்றனர்,
செல்லப்பிராணி வளர்க்கும் பலர். ஓவியக்கலையில் பிரபலமாகி வரும், ஹைபர் ரியாலிஸ்டிக் போர்ட்ரெய்ட்ஸ்'(தத்ரூப உருவப்படங்கள்) எனப்படும் ஓவியங்கள் தான், இப்படியான உயிரோட்ட நினைவுகளை அவர்களுக்கு தருகிறது. செல்லப் பிராணியின் தத்ரூப ஓவியத்துடன், தாங்கள் இருப்பது போன்ற ஓவியங்களை வரைந்து, வீடுகளின் சுவர்களில் மாட்டிவைத்துக் கொண்டு ரசிப்போரும் பலர்.
''செல்லப்பிராணி உயிருடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை என்னிடம் வழங்கி விடுவர்; அதோடு கொஞ்சி மகிழ்வது போன்று விதவிதமான 'போஸ்'களில் தத்ரூப ஓவியங்களை வரைய சொல்வர்; நானும் வரைந்து கொடுப்பேன். இதன் மூலம் தங்கள் செல்லப்பிராணி உயிரோடு இருப்பதை போன்றே பலரும் உணர்கின்றனர் என்பது தான் ஆச்சர்யம் தரக்கூடிய விஷயம்'' என்கிறார், இந்த வகை ஓவியங்களை வரைவதில் தேர்ச்சி பெற்ற திருப்பூரைச் சேர்ந்த சிவபாலன்.

