ADDED : பிப் 15, 2025 07:48 AM

''இயற்கையின் பேரழகை, குட்டி தொட்டிக்குள், பிளான்டட் அக்வாரியமாக வைத்தும் ரசிக்கலாம்,'' என்கிறார் கோவை, 'சில் பெட்ஸ்' உரிமையாளர் மணி.
பிளான்டட் அக்வாரியத்தில் வைக்க வேண்டிய செடிகள், பராமரிப்பு முறை குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஒரு தொட்டி முழுக்க செடிகளை நிரப்பி குறைந்த அளவில் மீன்களை விடுவதையே, பிளான்டட் அக்வாரியம் என்போம். இதில், லைட் செட்டப் உருவாக்குவதால், காட்சிக்கு அழகாக இருக்கும். இத்தொட்டியில், பில்டர் கட்டாயம் வைக்க வேண்டும்.
புதிதாக பிளான்டட் அக்குவாரியம் வைப்போர், பேசிக் டேங்க் அல்லது, நானோ வகை டேங்க்கில் மீன்களை வளர்க்கலாம். இதில் பேசிக் டேங்கில் குறைந்த வெளிச்சத்தில் வளரும் செடிகளான அனுபியாஸ் நானா, ஜாவா பெர்ன், கிரிப்டோகோரைன், வெண்லோபெர்ன், அமேசான் ஸ்வார்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம். தொட்டியின் கீழ் பகுதியில், இச்செடிகள் வளருவதற்கு மணல், உரம் நிரப்பி, அதன்மேல் செடி வைத்து, தண்ணீர் நிரப்பி, ஐந்து நாட்களுக்கு பின் மீன்கள் விடலாம்.
நானோ தொட்டி, ஒரு சதுரடி அளவே இருப்பதால், அலுவலக மேஜை மீது கூட வைத்து கொள்ளலாம். இதில், மாஸ், ஜாவா பெர்ன் செடி வைக்கலாம். நியான் டெட்ரா, கில்லிபிஷ், ரெயின்போ பிஷ், செர்ரி பார்ப் போன்ற வெரைட்டி மீன்களை மட்டுமே விட வேண்டும்.
சில ஆண்டுகள் மீன் வளர்த்த அனுபவம் இருப்பவர்களுக்கு, 'மாடுரேட்' டேங்க் நல்ல சாய்ஸாக இருக்கும். இத்தொட்டியில், நல்ல லைட்டிங் சிஸ்டம் இருப்பதோடு, ஓரளவு வளரும் செடிகளான, வாலிஸ்னேரியா, டைகர் வாலிஸ்னேரியா, டெம்பிள் மின்ட் வைக்கலாம்.
மீன் வளர்ப்பில், அதிக ஆர்வம் கொண்டவர்கள், ஹை-டெக் டேங்க் செட் அப் வைக்கலாம். இது பிரமாண்டமாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் லைட் செட் அப் உருவாக்கி, நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், மணல், குளிர்ச்சியான சூழல், கார்பன்-டை-ஆக்ஸைடு, பயோ பில்டர் ஆகியவை இருப்பது அவசியம். வெளிநாட்டு ரக செடிகள், சிவப்பு நிற செடிகள் வைத்தால், இரவு நேரத்தில் காட்சிக்கு அழகாக இருக்கும்.
செடிகளே இல்லாமல், வெறும் கல், உலர் மரக்கிளைகளை பற்றி வளரும் செடிகளை தொட்டியில் வைத்தும், மீன்கள் வளர்க்கலாம்.
இதில், அதிகபட்சம் 8 மணி நேரத்திற்கு மேல் லைட் எரிந்தால், பாசான் படரும். சில நேரங்களில் சிறிய வகை நத்தை, களைச்செடிகளும் உருவாகி வளரும். இதை கண்காணித்து, நீக்குவது அவசியம்.
இருவாரங்களுக்கு ஒருமுறை தொட்டியின் நீரை, 20-30 சதவீதம் மாற்றினால் போதும். பிளான்டட் அக்வாரியம் உருவாக்கிவிட்டால், வீட்டிற்குள் இயற்கையின் எழில் படருவதை உணரலாம்.

