ADDED : டிச 20, 2025 07:21 AM

''இந்திய அளவில் நடக்கும் நாய் கண்காட்சிகளில், 80க்கும் மேற்பட்ட சிறந்த இனத்திற்கான விருது, மூன்று சிறந்த பப்பிக்கான விருதுகளை பெற்ற, 40 ஜாக்ரஸ்ஸல் டெரியர் பப்பிகளை வைத்துள்ளேன்,'' என்கிறார் அதன் ப்ரீடர் சரவணன்.
கரூரில், ரகோஸ் கென்னல் என்ற பெயரில், ஜாக்ரஸ்ஸல் டெரியர் இன பப்பிகளை மட்டும் ப்ரீடிங் செய்யும் இவர், செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
வேட்டையாடும் போது, பொந்துகளில் ஒளிந்திருக்கும் நரிகளை எளிதில் அடையாளம் காட்டி கொடுப்பதற்காகவே, ஜாக்ரஸ்ஸல் டெரியர் இன பப்பிகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இது, அதீத புத்திசாலித்தனம், சுறுசுறுப்பாக இருப்பதோடு, பயிற்சி அளித்தால் எளிதில் எதையும் கற்று கொண்டுசெயலாற்றும்.
இதன் தனித்துவ திறனால், உக்ரைன் நாட்டின் ராணுவ படைகளுக்கு, வெடி மருந்து தடுப்பு பிரிவில், மோப்ப நாயாக பணியாற்றுகிறது. இப்படையில் பணியாற்றிய 'பேட்ரன்' என்ற பப்பியின் அதிதீவிர களப்பணியால், வெடிகுண்டு வெடிக்கும் முன் பலமுறை தடுக்கப்பட்டது. இதற்காக, 2022 ல், 'யுனிசெப்' அமைப்பால், 'நல்லெண்ண துாதர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலே முதன்முறையாக, கேரளா, திருவனந்தபுரம் போலீஸ் மோப்ப நாய் பிரிவுக்கு, என்னிடம் இருந்த ஜாக்ரஸ்ஸல் டெரியர் பப்பியை வாங்கி சென்றுள்ளனர். குழந்தைகள் கூட, இதற்கு பயிற்சி அளிக்கலாம் என்பது தான் கூடுதல் சிறப்பு. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகள் தர்ஷனா, பல 'சேம்பியன்' பப்பிகளை உருவாக்கியுள்ளார். இது, உரிமையாளரின் தேவையை புரிந்து கொண்டு உதவி புரியும்.
இதற்கு மிருதுவான முடிகளே இருப்பதால், பராமரிப்பது மிக எளிது. அதிகபட்சம் 13 இன்ச் உயரம், 7-10 கிலோ எடை கொண்டது என்பதால், சிறிய இடத்திலும் வளர்க்கலாம். 12-15 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இதற்கு ஒருநாளைக்கு 100 கிராம் அளவு உணவே போதும்.
டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு போன்ற பெரிய வகை நாய்களுக்கான ஆற்றல் கொண்டிருந்தாலும், இது உரிமையாளரின் உத்தரவுக்கு உடனே கீழ்படியும். பராமரிப்புக்கு அதிக மெனக்கெடல் இல்லாத சிறிய இன பப்பியை வளர்க்க ஆசைப்படுவோருக்கு, ஜாக்ரஸ்ஸல் டெரியர் சிறந்த தேர்வாக இருக்கும், என்றார்.

