பப்பிக்கு இதெல்லாம் பிடிக்காது... தெரிந்தது ரெண்டே ரெண்டு
பப்பிக்கு இதெல்லாம் பிடிக்காது... தெரிந்தது ரெண்டே ரெண்டு
ADDED : டிச 20, 2025 07:19 AM

''ஒன்றல்ல... இரண்டல்ல... 56 தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்படுத்திய பப்பியை, முறையான பயிற்சியால், சொல் பேச்சு கேட்கும் சமத்தான செல்லப்பிள்ளையாக மாற்றி இருக்கிறேன். பப்பி செய்யும் எந்த தவறுக்கும் காரணம் அதுவல்ல; நம் வளர்ப்பு முறை தான் என்பதை, உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்கிறார், பப்பியின் நடத்தை பயிற்சியாளர் விவேக்.
சிவகாசியில், 'விபு டாக் ட்ரைனிங் சென்டர்' நடத்தி வரும் இவர் கூறியதாவது:
நாம் படித்திருக்கிறோம் என்பதற்காக, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கிறோமா? பிறருடன் எப்படி பழகுவது, பேசுவது, ஒழுக்கம், கீழ்படிதல் போன்ற பல்வேறு வாழ்வியல் நெறிகளை, வகுப்பறைகளே கற்றுத்தரும். இதேபோல, பப்பியை வளர்க்க முடிவெடுத்தால், சில அடிப்படை பயிற்சிகளை சொல்லித்தருவதும் அவசியம். இல்லாவிடில், ஆசையாக வாங்கி, பின் வளர்க்க முடியாமல் அவதிப்படலாம்.
பயிற்சி இல்லாத ஒரு பப்பியை வீட்டில் வைத்திருந்தால் அதன் மனநிலை எப்போது, எப்படி மாறும் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. வீட்டிற்கு யாராவது வந்தால் அதீதமாக குரைப்பது, திடீரென தாவுவது, இழுப்பது, கடிப்பது என எல்லா சேட்டைகளையும் செய்யும். அத்தருணத்தில் பப்பி, உங்களின் கட்டளையை பின்பற்றாது. பப்பியை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்கஒரே வழி, பயிற்சி மட்டுமே.
வழக்கமான சில கட்டளைகளை செய்ய சொல்லி பழக்குவதை காட்டிலும், பிற நாய்களுடன் பழக வைப்பது, பொது இடங்களுக்கு அழைத்து சென்று, மனிதர்களுடன் பழக வைப்பது என, உரிமையாளரின் வாழ்வியலுக்கு ஏற்ப, பயிற்சி அளிக்க வேண்டும். இதை 4-9 மாதத்திற்குள் செய்வதே நல்லது. அதற்கு பின், அவை நம் சொல் பேச்சு கேட்காமல் அடம்பிடிக்கும்; பயிற்சி காலமும் அதிகமாகலாம்.
என்னிடம் பயிற்சிக்கு வரும் பப்பிகளை, தங்க வைத்து தான் சொல்லி கொடுக்கிறேன். ஏனெனில், புதிதாக வந்த பப்பி,சில பழக்கவழக்கங்களை மற்றவைகளை பார்த்தும் கற்று கொள்கின்றன. சில பப்பிக்கு தலையில் தொடுவது, சாப்பிடும் போது தட்டை தொடுவது, குறுக்கே நடப்பது பிடிக்காது. பயிற்சிக்கு பின் அவற்றிற்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலும், எதிர்க்காது.
பப்பிக்கு தெரிந்த இரு விஷயங்கள், 'ஆம்', 'இல்லை' என்பது தான். இதை நீங்கள் சைகை அல்லது எந்த மொழியில் சொன்னாலும், அதை பின்பற்றும். சிலர் பப்பியை சமாளிக்க முடியாவிடில், தெருவில் விட்டுவிடுகின்றனர். இதற்கு பதிலாக, அதன் நடத்தையை மாற்ற, பயிற்சி அளிக்கலாம் என்ற மாற்று யோசனைக்குள் செல்வதில்லை.
ஒரு பப்பி அதன் உரிமையாளரை கடித்து ஒன்று, இரண்டல்ல, 56 தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், அவர் அதற்கு முறையாக பயிற்சி அளிக்க அணுகினார். ஓரிரு மாதங்களில், அது என்ன சொன்னாலும் கேட்கும் அளவுக்கு, அது மாறிவிட்டது. இப்படி நிறைய அனுபவங்கள் இத்துறையில் உள்ளன. எந்த இன பப்பி வாங்கினாலும், அதற்கு பயிற்சி அளிக்க மட்டும் மறந்துவிடாதீர்கள், என்றார்.

