ADDED : ஜூலை 25, 2025 10:00 PM

''ஒ ரு சிறுத்தையை சமாளிக்க, இரு கேன்கோர்சோ நாய்கள் இருந்தால் போதும். அந்தளவுக்கு வேட்டையாடும் திறன் கொண்டது. இதை முறையாக பயிற்சி அளித்து பாதுகாவலுக்கு பயன்படுத்தினால், யாராலும் உங்களை நெருங்கவே முடியாது,'' என்கிறார் பப்பி பயிற்சியாளர் பிரதீஷ்.
பெங்களூருவில், பப்பிகளுக்கு பயிற்சி அளிக்கும் இவர், கேன்கோர்சோ இன நாய்களின் தனித்துவம் பற்றி நம்மிடம் பகிர்ந்தவை:
உலகளவில் அதிக ஆக்ரோஷம் கொண்ட நாய்களின் பட்டியலில் கேன்கோர்சோவும் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சம் 70 செ.மீ., உயரம், 50 கிலோ வரை எடையுடன் இருப்பதால், பார்த்தாலே பயத்தை உருவாக்கிவிடும்.
இத்தாலிய மஸ்தீப் இனத்தை சேர்ந்தது. இதன் பூர்வீகம் இத்தாலி. அந்நாட்டு ராணுவம், காவல் ரோந்துக்கு இதை பயன்படுத்துகிறது. இதற்கு ஆடு போல தொங்கும் காது இருப்பதால் செவித்திறன் குறைவாக இருக்கும். இதனால், பிறந்த சில மாதங்களிலேயே, காது மடலை வெட்டிவிடுவர். இதற்கு அதிக வேகம் இல்லை; ஆனால், அதிக திறன் கொண்டது.
குறிப்பாக, கடித்து இழுக்கும் திறன் அதிகம் இருப்பதால், காவலுக்கு பயன்படுத்துவதே சிறந்தது. பங்களா, தோட்டம், கால்நடை பாதுகாவல், மேய்ச்சல் பணிகளுக்கு இதை பயன்படுத்தலாம். பெடரேஷன் சினோலாஜிக் இன்டர்நேஷனல், அமெரிக்க கென்னல் கிளப் போன்ற பன்னாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதால், இதை கண்காட்சியில் காட்சிப்படுத்த, பலரும் விரும்பி வளர்க்கின்றனர்.
கேன்கோர்சோ வளர்க்க விரும்பினால், அதற்கு கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும். சில அடிப்படை பயிற்சி வழங்கினால் மட்டுமே, அது உரிமையாளரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வளவு கரடுமுரடான குணாதிசயம் இருந்தாலும், பழகினால் மென்மையாகவே நடந்து கொள்ளும். என்ன சொன்னாலும் கேட்கும் அளவுக்கு பணிவாக இருக்கும்.
இதை அப்பார்ட்மெண்ட்டுகளில் கட்டாயம் வளர்க்க கூடாது. சிறிய இடத்தில் இதை வாங்கி வளர்த்தால், சிறிது நாட்களுக்கு பின், முறையான உடற்பயிற்சி இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு, ஆக்ரோஷமாக மாறிவிடலாம். இரு கேன்கோர்சோ பப்பி இருந்தால், ஒரு சிறுத்தையை கூட வேட்டையாடி விடமுடியும். இதன் கண்காணிப்பு வளையத்தில் இருந்து, எதிராளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, என்றார்.