'விலங்குகளுக்கு விஷம்' அருகில் நீங்கள் இருந்தால்...
'விலங்குகளுக்கு விஷம்' அருகில் நீங்கள் இருந்தால்...
ADDED : ஏப் 26, 2025 07:36 AM

அது ஒரு பனி உறைந்த அதிகாலை நேரம். போனில் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவரின் கனத்த வார்த்தைகளை கேட்டு உறைந்து போய்விட்டேன்...
பிறந்து 10 நாட்களே ஆன 7 பப்பிகளின் தாய்க்கு, யாரோ விஷம் வைத்ததால், இறந்துவிட்டது என்பதே அத்தகவல். உடனே கிளம்பி சம்பவ இடத்தை அடைந்தேன். தன் தாய் உயிரோடு இல்லை என்பது அறியாமல், அப்பப்பிகள் ஒவ்வொன்றும், சுரப்பை நிறுத்தி கொண்ட பால்மடியில் முட்டி மோதிக் கொண்டிருந்தன.
அக்காட்சியை கண்டதும் இன்னும் கொஞ்சம் நொறுங்கிவிட்டேன். என்னை போலவே, இறுகிய முகத்தோடு ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். சிலர் இறந்த நாயை புதைக்க வேண்டுமென்பதில் அவசரம் காட்டினர். நானோ, அருகிலுள்ள போலீஷ் ஸ்டேஷனுக்கு தெரிவித்தேன். போலீஸ் வரும் முன்பே தன்னார்வலர்கள் பலர் திரண்டனர். அதன்பின், சட்டப்படி நடவடிக்கை, விசாரணைகள் துவங்கின...
இதுபோன்ற சூழலில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...
மனிதன் உட்பட எந்த ஜீவராசியாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தின் படி, அது சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுள்ளன. அடிப்பது, துன்புறுத்துவது விஷம் வைத்து கொல்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றம். இது, விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 11ல் விளக்கப்பட்டுள்ளது. குற்றச்செயலின் தன்மைக்கேற்ப, அபராதம், சிறைதண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்.
தெருநாய், பூனைகள் உட்பட எந்த விலங்குக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருந்தாலும், அவற்றை உடனே புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்க கூடாது. போலீசில் புகார் அளிக்க வேண்டும். இறந்த நாயை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததை உறுதி செய்யும் பட்சத்தில் உணவளித்தவர்களை அடையாளம் காண்பது அவசியம். சி.சி.டி.வி., கேமரா பதிவுகள், நேரில் பார்த்த சாட்சியங்கள், புகைப்படங்கள் போன்றவை, இப்புகாரில் சந்தேகிக்கும் நபரை உறுதி செய்யவும், குற்றவாளிகளை கண்டறியவும் உதவியாக இருக்கும்.
- பபிதாராஜ், வழக்கறிஞர் மற்றும் நிறுவனர், 'மாத்வராஜ் அனிமல் கேர் டிரஸ்ட்' உடுப்பி, கர்நாடகா.

