
'ரவுப் கேட்ஸ்' என்ற பெயரில், பூனை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், சென்னையை சேர்ந்த, பூனை ஆர்வலர் மவுஸ்ஸாமா ரவுப்.
எந்த இன பூனையை, யார் வளர்க்கலாம் என்பது குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
உலகில், 75க்கும் மேற்பட்ட இன பூனைகளை, மக்கள் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இந்தியாவின் தட்பவெப்ப சூழலுக்கு, சில இன பூனைகளையே வளர்க்க முடியும். இதில் நம் நாட்டு இன பூனைகள், அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதோடு அனைத்து தட்பவெப்ப சூழலையும் தாங்கி கொள்ளும். வெளிநாட்டு இன பூனை வாங்கும் முன் அதன் சில அடிப்படை குணாதிசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
பெங்கால், சியாமிஸ் இன பூனைகள் அதிக சத்தம் எழுப்பக்கூடியவை. தன்னுடன் விளையாட வருமாறு அடிக்கடி அழைக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இப்பூனைகளை தனியே விட்டு சென்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடும். வேலைக்கு செல்வோர், அதிக நேரம் பூனையின் பராமரிப்புக்கு ஒதுக்க முடியாதவர்கள், பெர்ஷியன் டால் பேஷ், ஹிமாலயன் இன பூனைகள் வாங்குவதே சிறந்தது.
இவற்றிற்கு வாரத்திற்கு ஒருமுறை கண், காது சுத்தப்படுத்துதல், முடியை சீவிவிட்டால் போதும். வீட்டில் ஆளில்லாத போதும், இவை பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்கும். பஞ்ச் பேஷ் கொண்ட பூனை இனங்களை வாங்கினால், ஒருநாளைக்கு இருமுறையாவது கண்களை சுத்தப்படுத்துதல் அவசியம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை காது சுத்தப்படுவது, தினசரி அதன் முடியை சீவிவிடுதல் என, பராமரிக்க கட்டாயம் நேரம் செலவிட வேண்டும்.
பூனைக்கான உணவுமுறை சார்ந்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இவை, இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடும். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட கொடுப்பதே நல்லது. சிலர், உலர் உணவுகளை அதிகம் கொடுக்கின்றனர். இதை சாப்பிட்டு, போதிய நீர் உட்கொள்ளாத பட்சத்தில், சீறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கேரட், உருளைகிழங்கு, பூசணிக்காய் போன்றவற்றை அதன் உணவில் சேர்க்கலாம். சாக்லெட், வெங்காயம், பால், பால் சார்ந்த பொருட்களை உணவாக கொடுத்தால், ஒவ்வாமை ஏற்படும் என்பதால் தவிர்ப்பது நல்லது. பூனை தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளும். அழுக்கான இடத்தில் இருக்க விரும்பாது. இதன் பொருட்களை தினசரி சுடுதண்ணீரில் கழுவிய பிறகு பயன்படுத்தும் பட்சத்தில், நோய் கிருமிகள் தொற்றில் இருந்து தற்காக்கலாம்.
வீட்டிற்குள் வைத்து வளர்த்தாலும், செல்லப்பிராணியாகவே இருந்தாலும், பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க, தடுப்பூசி போடுவது, குடற்புழு நீக்கம் செய்வது அவசியம். பூனை கோபமாக இருக்கும் போது அதை சீண்டவே கூடாது. அந்த நேரத்தில் சமாதானம் செய்வதாக நினைத்து கொஞ்சுவது, தொடுவது என, தொந்தரவு செய்தால், ஆக்ரோஷமாகிவிடும். மென்மையான இயல்புடன், சுதந்திரமாக இருக்க விரும்பும். இதை புரிந்து கொண்டு பராமரித்தால், எளிதில் உரிமையாளருடன் நெருங்கிவிடும். பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்து விட்டால், சத்தம் போடாது, என்றார்.