உலக அரங்கில் இந்திய ராஜாக்கள் சிவிங்கிப்புலியாக சீறிப்பாயுது
உலக அரங்கில் இந்திய ராஜாக்கள் சிவிங்கிப்புலியாக சீறிப்பாயுது
ADDED : பிப் 07, 2025 10:35 PM

''வெளிநாட்டு இனங்களை காட்டிலும், நம் இன நாய்களுக்கு, அதீத வேட்டையாடும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதை உலகளாவிய கென்னல் கிளப்களில் பதிவு செய்ய, 'கென்னல் கிளப் ஆப் இண்டியா' (கே.சி.ஐ.,) அமைப்புமுயன்று வருகிறது. இதில் என் சிறு பங்களிப்பு இருக்க வேண்டுமென்ற உந்துதலில், நாட்டு இன நாய்களுக்கு மட்டும், பிரத்யேக பண்ணை வைத்துள்ளேன்,'' என்கிறார், கோவையை சேர்ந்த அனீஷ் அஷ்ரப்.
கோயமுத்துார் மான்செஸ்டர் கென்னல் கிளப் கமிட்டி உறுப்பினரான இவர், கே.சி.ஐ., சான்றிதழ் பெற்ற, நடுவர் குழுவுக்கான இணைப்பாளராகவும் உள்ளார். உலகளாவிய நாய் கண்காட்சிகளில், நம் நாட்டு இன நாய்களும் பங்கேற்கிறதா என கேட்டோம்.
அவர், நம்மிடம் பகிர்ந்தவை: உலகளாவிய கென்னல் கிளப்களில், இந்திய நாட்டு இன நாய்களின் உருவம், முகத்தோற்றம், உடலமைப்பு குறித்த தகவல்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இதற்காக, கே.சி.ஐ., அமைப்பு தற்போது முயன்று வருகிறது.
தமிழகத்தின் ராஜபாளையம், கர்நாடகாவின் கேரவன் ஹவுண்டுஆகிய இரு ப்ரீடுகளின் தனித்தன்மையை, பெல்ஜியம் நாட்டை தலைமையிடமாக கொண்ட, 'எப்.சி.ஐ.,' எனும் 'பெடரேஷன் சினோலோஜிக் இண்டர்நேஷனலே' (Federation Cynologique Internationale) என்ற அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.
விதிமுறைகள்
இந்த அமைப்பு, ஒரு நாய் இனத்தின் தனித்திறன்களை பகுப்பாய்வு செய்து,பதிவு செய்ய சில விதிமுறைகள் வகுத்துள்ளது. இதில்முக்கியமானது, கலப்பினம் இல்லாமல், ஒரே இனத்தில் ஐந்து தலைமுறைகளை சேர்ந்த, 100 நாய்களை, காண்பிக்க வேண்டும்.
கே.சி.ஐ., அமைப்பின் பதிவில் இருப்பது போன்ற முக அமைப்பு, உயரம், எடை, தனித்தன்மை இருத்தல் அவசியம். இதை, எப்.சி.ஐ., நடுவர் குழு ஆய்வு செய்த பிறகே அங்கீகரிக்கும். மற்ற வெளிநாட்டு கென்னல் கிளப்களும், எப்.சி.ஐ., விதிமுறைகளையே பின்பற்றுகின்றன. இதன்பிறகே, வெளிநாட்டில் நடக்கும் நாய் கண்காட்சிகளில், நம் நாட்டு இன நாய்களால் பங்கேற்க முடியும்.
பயிற்சி அவசியம்
தமிழகத்தில், ராஜபாளையம், கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை என்ற நான்கு இனங்கள் இருக்கின்றன. கர்நாடகா அரசு, முதொல் ஹவுண்டு இன நாய் வளர்ப்பவர்களுக்கு, பண்ணை அமைத்து பராமரிக்க, மானியம் வழங்குகிறது. அம்மாநில அரசின் சொந்த பராமரிப்பில், 800 முதொல் ஹவுண்டு இன நாய்கள் இருக்கின்றன. இதை தமிழகமும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
என்னிடம், நம் மாநில இனமான கோம்பை மற்றும் கர்நாடகா- மகாராஷ்டிரா மாநில இனமான கேரவன் ஹவுண்டு உள்ளன. இவ்விரு நாய்களும், வேட்டையாடும் திறன் கொண்டவை.
இதில், கேரவன் ஹவுண்டு நாயின் வேகம், சிவிங்கி புலியை ஒத்திருக்கும். நீளமான, இளைத்த தேகம், கூரிய கண், காது அமைப்புகள் கொண்டிருப்பது, சத்தம் கேட்டாலோ, வெளியாட்கள் வந்தாலே, துரத்த ஆரம்பித்துவிடும். அதேசமயம், உரிமையாளரின் கட்டளைக்கும் கீழ்படியும்.
நம் நாட்டு இன நாய்களை, முறையாக பயிற்சி அளித்தால், ராணுவம், போலீஸ் துறைகளில் ரோந்து, பாதுகாப்பு பணிகளுக்குபயன்படுத்தி கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால், பராமரிப்புக்கும் மெனக்கெட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.