ADDED : நவ 01, 2025 06:44 AM

மதுரையில், 'கிளாடு வே' (Glad way) கென்னல் நடத்திவரும் மணிகண்டபிரபு, நிறைய சிட்ஜூ பப்பிகளை சேம்பியனாக்கியுள்ளார். சிட்ஜூ பப்பியை எப்படி பராமரிப்பது என்பது குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
சிட்ஜூ பப்பியின் தாயகம் திபெத். ஆனால், பின்னாளில் சீனர்கள் தான் இப்பப்பியை அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, மார்க்கெட்டில் அடையாளப்படுத்தினர்.
இது அதிகபட்சம் 20-28 செ.மீ., உயரம்; 4-8 கிலோ எடை கொண்டது. உடல் முழுக்க மிருதுவான முடிகள் இருப்பதோடு, நிறைய நிறங்களில் காணப்படுகிறது.
உயரத்தை விட நீளமான உடல், வட்டவடிவில் தலை, பெரிய கண்கள், சிறிய மூக்கு என, பார்ப்பதற்கே பொம்மை மாதிரி இருப்பதால், பலரும் இதை வளர்க்க விரும்புகின்றனர்.
துறுதுறுவென எப்போதும் ஆக்டிவ்வாக சேட்டை செய்யும் இப்பப்பி அதீத புத்திசாலி. இதற்கு நீங்கள் பிரத்யேகமாக பயிற்சியாளர் வைத்து, பயிற்சி அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதனுடன் நீங்கள் நேரம் செலவிட்டாலே, உங்கள் சொல்பேச்சு கேட்கும்.
தினசரி முடியை சீவிவிடுவது, இரு வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டுதல், நகம் வெட்டிவிடுதல், காது சுத்தம் செய்தல் என, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு குரூமிங் செய்யாவிடில், முடியில் முடிச்சுகள் விழ வாய்ப்பு அதிகம்.
சிறிய வீடாக இருந்தாலும் இதை வளர்க்கலாம். இது, செல்லப்பிராணியாக மட்டுமே நடந்து கொள்ளும். பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. தனிமையில் இருப்போருக்கு ஏற்ற துணையாக இது இருக்கும்.
பிறந்து ஒரு வயது வரை, ஒரு நாளைக்கு 50-60 கிராம் உணவு போதும். அதற்கு பின், தினசரி 100 கிராம் உணவு, அதன் வளர்ச்சிக்கு போதுமானது. ஆனால் இதில், 30 சதவீதம் புரதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் அதீத உணவு கொடுத்து, எடை அதிகரித்தால், நடக்க முடியாமல் சிரமப்படலாம்.
இது, குறைந்த எடையுடன் இருப்பதால், பெரிய வகை செல்லப்பிராணிகளுடன் விளையாட அனுமதிக்கக்கூடாது. பிறந்ததில் இருந்தே, பிற விலங்குகளுடன் சேர்ந்து வளரும் பட்சத்தில் பாதிப்பில்லை.
இப்பப்பியை, லசாப்சோ, பூடில், பிச்சான்பிரைஸ் போன்ற மற்ற சிறிய வகை பப்பிகளுடன் இனப்பெருக்கம் செய்து விற்பதை காண முடிகிறது. பப்பியாக இருக்கும் போது, இதை அடையாளம் காண முடியாது. வளரும் போது, இவற்றின் குணாதிசயம் மாறுவதோடு, நோய் பாதிப்புக்குள்ளாகவும் அதிக வாய்ப்புள்ளது.
சிட்ஜூ வாங்குவதாக இருந்தால், அதன் பெற்றோர் யார், அதை பதிவு செய்ததற்கான சான்றிதழ், மரபு ரீதியான நோய்கள் ஏதுமில்லை என்பதை அறிந்து வாங்குவதே சிறந்தது.
இதை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். வயதானாலும் அதிக உயரம் வளராது என்பதால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இது, உரிமையாளரின் உணர்வுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளும். அன்பை வெளிகாட்டி, ஆரத்தழுவி கொள்வதோடு, நிழல் போலவே சுற்றி சுற்றி வரும் என்பதால், சிட்ஜூவிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், என்றார்.

