/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'காந்தியின் பாதையே கஸ்துாரிபாய் பாதை'
/
'காந்தியின் பாதையே கஸ்துாரிபாய் பாதை'
ADDED : ஜன 18, 2026 05:22 AM

வாசித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.அனுபமா எழுதிய 'நான் கஸ்துார்'- என்ற நுால் குறித்து எழுத்தாளர் அகிலா, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். காந்தியை பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது மனைவி கஸ்துாரிபாய் பற்றி, காந்தியின் மனைவி என்பதை தவிர, வேறு எதுவும் தெரியாது. அனுபமா எழுதிய 'நான் கஸ்துார்'- என்ற நுாலில் அவர் குறித்து நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன.
இந்த நுால் காந்தியின் மனைவி கஸ்துார்பாவின் சிறுவயது வாழ்க்கை, திருமணம், தென்னாப்பிரிக்க பயணம், அங்கு அவர் நிகழ்த்திய போராட்டங்கள், இந்திய சுதந்திர போராட்டங்கள் குறித்த தனித்துவமான பதிவுகள் இந்நுாலில் உள்ளன.
கஸ்துாரிபாய்க்கு தெரிந்ததெல்லாம் போர்பந்தர் ஊரும், அவர்களின் பனியா சமூகமும், சுற்றியிருக்கும் ராஜ்கோட், அகமதாபாத் நகரங்களும் மட்டுமே.
காந்தியை திருமணம் செய்த பிறகு, காந்தியை எல்லோரும் அழைப்பது போல் இவரும் 'மோகா' என்று அழைக்கிறார். காந்திக்கும் கஸ்துாரிபாய்க்கும் ஒரே வயது.
காந்தியை விட கஸ்துாரிபாய் ஆறு மாதங்கள் மூத்தவர். இருவருக்கும் சண்டை வரும்போது, 'என்னை விட வயதில் சிறியவன் நீ' என்று சொல்லிக் காட்டுவாராம்.
காந்தியை பற்றியும், காந்திய சிந்தனை பற்றியும் எதிரான கருத்துகளை கஸ்துாரிபாய் பேசுவதையும், இந்த நுாலில் விளக்கப்பட்டுள்ளது.
காந்தி சட்டம் படிக்க லண்டன் செல்ல, அவரின் அண்ணன் லஷ்மிதாஸ் காந்தி வாங்கிய, 13 ஆயிரம் ரூபாய் கடனை, வக்கீல் தொழில் செய்து அடைக்க முடியாததால், கடனை அடைக்கவே காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார் என்பதை கஸ்துாரிபாய் குறிப்பிடுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது தங்களுக்கென்று தனியாக வீடு கிடையாது என்றும், பொதுவில் எல்லோருடனும் தங்கி இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் நுாறு ஏக்கரில் இடம் வாங்கி 'பீனிக்ஸ்' என்ற பெயரில் ஆசிரமம் அமைக்கிறார் காந்தி. பின்னாளில் காந்தி இந்தியா வந்த பிறகு சபர்மதி ஆசிரம் தொடங்க இதுவே காரணமாக இருந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து அவர் இந்தியா வரும் போது, எல்லாவற்றையும் அங்கிருப்பவர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டதை கஸ்துாரிபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நமக்கும் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கலங்கி இருக்கிறார். காந்தியின் எண்ணங்களை புரிந்து அமைதியாக அவரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா வந்த பிறகு பதினாறு ஆண்டு காலம் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை, அரசுக்குக் கொடுத்து விடலாம் என்று காந்தி முடிவு எடுத்ததையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இருந்தும் காந்தி முடிவை ஆசிரமவாசிகளும் நம்புவதால், ஆசிரமத்தில் இருந்து வெளியேறி, பேரக்குழந்தைகளுடன் அனுசூயா சாராபாய் வீட்டிற்குச் சென்றதாக அவர் எழுதியிருக்கிறார்.
இந்தியா என் ஜென்ம பூமி என்றால், தென்னாபிரிக்கா என் கர்ம பூமி என்கிறார் கஸ்துாரிபாய். கஸ்துாரிபாய் பீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்தபோதே, காந்தி தனது பிரம்மச்சாரியத்தைத் தொடங்கியதாகவும், இருவரும் தனித்தனி அறைகளில் இனி தங்குவோம் என்று சொன்னதாகவும் கஸ்துாரிபாய் எழுதி இருக்கிறார். 36 வயதே ஆன கஸ்துாரிபாயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மகன்களை ஆசிரமத்திலேயே வளர்த்த விதம், மகன் தேவதாஸ் ராஜாஜி, மகள் லட்சுமி இருவரின் காதல் கல்யாணம், ரவீந்திரநாத் தாகூரின் அண்ணன் மகள் சரளாதேவியுடன் காந்தி கொண்டிருந்த காதல், இது குறித்து கஸ்துாரிபாய் கொண்ட கவலையும் மன உளைச்சலும்... என, -கஸ்துாரிபாயின் வாழ்வில் நடந்த பல விஷயங்களை இந்த நுால் சொல்கிறது.
ஆனாலும் சராசரி இந்திய பெண்ணாக இல்லாமல், காந்தியின் கொள்கைகளை தன்னுடையதாகக் கொண்டு அவரின் மறுபிரதியாய் கஸ்துாரிபாய் வாழ்ந்திருப்பது தெரிகிறது.
சிறுவயதில் இருந்த துடுக்குத்தனமும், முரண்டு பிடிக்கும் தன்மையும் குறைந்து, ஆசிரமத்தில் இருந்த அனைவரையும் சாதி, மதம் பாராமல் தன் மக்களாகவே ஏற்று வாழ்ந்திருக்கிறார்.
எழுத்தாளர் நல்லநம்பி சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
கஸ்துாரிபாய் பீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்தபோதே, காந்தி தனது பிரம்மச்சாரியத்தைத் தொடங்கியதாகவும், இருவரும் தனித்தனி அறைகளில் இனி தங்குவோம் என்று சொன்னதாகவும் கஸ்துாரிபாய் எழுதி இருக்கிறார். 36 வயதே ஆன கஸ்துாரிபாயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

