/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'களை'யிழக்காத நாட்டுப்புற கலை!
/
'களை'யிழக்காத நாட்டுப்புற கலை!
ADDED : ஜன 18, 2026 05:24 AM

த மிழர்களின் வாழ்வியல் சூழல் சார்ந்த விழா பொங்கல். உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விழா. தொழில் நகரான திருப்பூரின் பல இடங்களில் பொங்கல் விழா களை கட்டியது.
விவசாயிகள் மட்டுமின்றி, காவல் துறை, தீயணைப்புத்துறை, பள்ளி, கல்லுாரிகள் என, அனைத்து இடங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கிராமங்கள், விழாக்கோலம் பூண்டிருந்தன.
இதற்கெல்லாம் மேலாக, வழிபாடின்றி கலைகள் இல்லை; கலைகள் இன்றி வழிபாடு இல்லை என்பதற்கேற்ப, பல இடங்களில் நாட்டுப்புற கலைகள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
வில்லுப்பாட்டு, சேவையாட்டம், பிருந்தாவனக் கும்மி, ஒயிலாட்டம், காவடியாட்டம், லாவணி, கணியான் கூத்து, தெருக்கூத்து, கரகாட்டம், காளியாட்டம், தேவராட்டம், கொக்கலிக் கட்டையாட்டம்,உடுக்கைப் பாட்டு என, வரிசைக் கட்டும் நாட்டுப்புற கலைகள் ஆங்காங்கே அரங்கேற்றப்பட்டன.
பலதரப்பட்ட கலைகளுக்கேற்ப அரிதாரம் பூசிய கலைஞர்கள், அதற்கேற்ப வேடமணிந்து, நளினம், பாவனையுடன் கலைகளை அரங்கேற்றி, பார்வையாளர்களை பரவசத்தில் மூழ்கடித்தனர். தப்பாட்டம் உள்ளிட்ட அதிர வைக்கும் பாண்டு வாத்திய இசைகளின் ஒலிகளும், பார்வையாளர்களை நடனம் போட வைத்தது.
திருப்பூர் நொய்யல் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் தமிழர்களின் நாட்டுப்புற கலையுடன், கேரள நடனமும் கூடுதலாக இடம் பெற்று, சமூக நல்லிணக்கம் பேணப்பட்டது. இவ்வாறு, உற்சாகம் பொங்க, பொங்கல் கொண்டாட்டம் நிறைவடைந்திருக்கிறது.

