ADDED : ஏப் 26, 2025 07:40 AM

மனிதர்களுக்கு ஐந்தடுக்கு தோல் அமைப்பு உள்ளது. நாய்களுக்கு 2 அல்லது 3 அடுக்கு தோல் அமைப்பே இருப்பதால் மிகவும் சென்சிட்டிவானது. பப்பியின் சருமத்தை பாதுகாக்க இயற்கையாகவே தோலில் எண்ணெய் போன்ற திரவம் சுரந்து, பாதுகாப்பு படலம் உருவாக்கும். இது, தோல்வியாதி, உண்ணி, பூச்சிகளால் ஏற்படும் தோல் பாதிப்பில் இருந்து, பப்பியின் சருமத்தை பாதுகாக்கும்.
இதற்கு, நாம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் புளோர் கிரீனர்கள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி, எரிச்சல், அரிப்பை உண்டாக்கும். இதோடு, பப்பியின் தோலின் மேல் சுரக்கும் எண்ணெய் படலத்தையும் அழித்துவிடும். இது தொடர்ந்தால், தீவிர தோல் நோய் ஏற்படலாம். இதிலிருந்து தற்காக்க, பப்பிக்கென தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதேபோல, ஆசை ஆசையாய் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள், எண்ணெய்யில் பொரித்தவை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அன்பிற்குரிய செல்லப்பிராணிகளுக்கு கொடுக்க கூடாது. உணவு ஒவ்வாமை தோல் வியாதியை ஏற்படுத்தும்.
எப்படி பராமரிப்பது
தோல் அலர்ஜி இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில், இரு நாட்களுக்கு ஒருமுறை பப்பியை குளிப்பாட்டலாம். வீட்டில் சமைத்த மசாலா சேர்க்கப்படாத உணவுகள், பாக்கெட் உணவுகள் மட்டுமே சாப்பிட கொடுக்க வேண்டும். தினசரி பப்பியின் உணவில், 3-5 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொடுப்பது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பியதும், பப்பியின் தோலில் ஏதேனும் பூச்சிகள் இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். அதிக முடி கொண்ட பப்பிகளுக்கு தினசரி சீவி விட வேண்டும். இல்லாவிடில், முடிச்சுகள் ஏற்பட்டு, தோலில் சிவப்பு நிற தடிப்புகளை ஏற்படுத்தலாம். பப்பிகளுக்கு மாதம் ஒருமுறையும், வளர்ந்த பின் 4 மாதங்களுக்கு ஒருமுறையும், கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். குடற்புழுக்களால் ஏற்படும் தோல் நோய், முடி உதிர்வதை, இதன்மூலம் தவிர்க்கலாம்.
இதோடு, பாக்டீரியாக்கள், உண்ணிகள், பூஞ்சை தொற்று போன்றவற்றாலும், பப்பிக்கு தோல் வியாதி ஏற்படலாம் என்பதால், மருத்துவரை அணுகி, உரிய பரிசோதனைகள் வாயிலாக சிகிச்சை அளிப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.
-டாக்டர். எம்.எஸ்.சரவணன்,
உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, திருமங்கலம், மதுரை.