
''செ ல்லப்பிராணிகளில் சற்று வித்தியாசமானது பூனை. அது அனுமதித்தால் தான் தொடவே முடியும். மீறினால் நமக்கு காயம் ஏற்படுவது நிச்சயம்,'' என்கிறார் பிரகாஷ்.
கோவை, சிவானந்தாகாலணியில், குரூமிங் சென்டர் நடத்தி வருபவர் பிரகாஷ். ஐடி., ஊழியரான இவர், பூனைகளுக்கு குரூமிங் செய்வது குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
என் முதல் செல்லப்பிராணி பூனை தான். ஏழு ஆண்டுகளுக்கு முன் பெர்ஷியன் இன பூனை வாங்கினோம். பொதுவாக அவை தன்னையே சுத்தம் செய்து கொள்ளும் என்பதால் குரூமிங் செய்யவில்லை. ஆனால், சில மாதங்களிலே முடி உதிர்வு அதிகரித்தது. சில உடல் உபாதைகளும் அடிக்கடி ஏற்படவே, பின்பு தான் குரூமிங் செய்வதன் முக்கியத்துவம் பற்றி அறிந்தோம். ஆனால், அதற்கு செலவு அதிகரித்தது. பட்ஜெட்டிற்கு தரமான குரூமிங் சேவை வழங்க முடிவெடுத்து, பயிற்சிக்குப்பின் 'பட்டி டூ மட்டி' (Buddy 2 Muddy) சென்டர் துவக்கினோம்.
நாய்களுக்கு குரூமிங் செய்வதை காட்டிலும், பூனைகளை அலங்கரிப்பது தான் சவால் மிகுந்தது. அது அனுமதித்தால் தான் தொடவே முடியும். இங்கு வரும் பூனைகளுடன் கொஞ்ச நேரம் விளையாடி, அதற்கு நம்பகத்தன்மை ஏற்படுத்திய பிறகே, குரூமிங் செய்ய துவங்குவோம்.
தினசரி சீவிவிட்டாலும், சில முடி உதிராமல் தோலில் ஒட்டியிருக்கும். இதை அகற்றாமல் விட்டால் முடி உதிர்வு அதிகரிக்கிறது. இதை பூனை சாப்பிட்டால், வாந்தி எடுக்கலாம். இதனால், உடல் முழுக்க உள்ள முடியை மெதுவாக சீவி அப்புறப்படுத்த வேண்டும். காதை சுத்தம் செய்வது மிக அவசியம். இல்லாவிடில் பூஞ்சை தொற்று ஏற்படலாம்.
பெர்ஷியன் இனத்தில், பஞ்ச், எக்ஸ்ட்ரீம் பஞ்ச் பூனைகளுக்கு மூக்கு சிறியதாக இருக்கும். கண்களில் இருந்து நீர் அடிக்கடி வெளியேறும். இதனால் அப்பகுதியின் நிறமே மாறிவிடும். இதை சுத்தப்படுத்தினால் தான், கண்களில் தொற்று பாதிப்பு ஏற்படாது. நகம் வெட்டாமல் விட்டுவிட்டால், அது கொஞ்சினாலும் கீறல் ஏற்படுவது உறுதி.
பூனையின் ஆரோக்கியத்தில், உணவை போலவே பராமரிப்புக்கும் சரிபாதி முக்கியத்துவம் தர வேண்டும். நாட்டு இன பூனைகள் மட்டுமே தன்னை தானே சுத்தப்படுத்தி கொள்ளும். வெளிநாட்டு இன பூனைகளை, நாம் தான் பராமரிக்க நேரம் ஒதுக்க வேண்டும். வீட்டிலேயே பூனைகளை குளிப்பாட்டலாம். ஆனால் உடலில் உள்ள நீரை முற்றிலும் துடைத்து முறையாக சுத்தப்படுத்த வேண்டும். இதில் அனுபவம் இல்லாதவர்கள், குரூமிங் சென்டர்களை நாடுவதே சிறந்தது. பூனையை பராமரிப்பதும், குரூமிங் செய்வதும் ஆடம்பரம் அல்ல; அது பூனையின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது, என்றார்.

