ADDED : ஏப் 05, 2025 06:11 AM

அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்ப்பதற்கு ஏற்ற சிறிய வகை பப்பியின் பராமரிப்பு பற்றி விளக்குகிறார், பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ஸ்கிரீம் கென்னல் (Starscream Kennel) உரிமையாளர் பிரசாந்த்.
பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து, விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வடிவமைக்கும் துறையில், பணி புரியும் இவர், கென்னல் கிளப் ஆப் இண்டியா (கே.சி.ஐ.,) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ப்ரீடரும் கூட.
இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
என்னிடம், 18 பப்பிகள் இருக்கின்றன. சின்ன வயதில் இருந்தே வீட்டில் பப்பிகள் இருந்ததால், ப்ரீடிங் துறையில், நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. கே.சி.ஐ., விதிமுறைப்படி, 8 மாதங்களுக்கு ஒருமுறை, பப்பியின் ஆறு வயது வரை மட்டுமே, இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். அப்போது தான், ஆயுட்காலம் முழுக்க ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான சந்ததிகளும் உருவாகும்.
பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில், இடவசதி பற்றாக்குறை, அடுக்குமாடி குடியிருப்புகளின் பெருக்கம், பப்பி பராமரிப்பில் அதிக நேரம் செலவிட முடியாமை போன்ற பல்வேறு காரணங்களால், பலரும் டாய் வகை பப்பிகளையே விரும்பி வாங்குகின்றனர்.
இதிலும், சிட்ஜூ, பூடில், மால்தீவ்ஸ், பிசான் பிரைஸ் போன்ற பப்பிகள், பார்ப்பதற்கு பொம்மை மாதிரி, உடல் முழுக்க மென்மையான முடிகளுடன், துறுதுறுவென இருப்பதால், குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். இதை வாங்குவதற்கு முன்பு, அதன் பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சிட்ஜூ (Shihtzu)
இதன் மூக்கு, தலைக்கு நேராக இருப்பதோடு, உடல் முழுக்க அடர்த்தியாக முடி இருக்கும். மேல், கீழ் தாடை பற்கள் நேராக இருக்கும். இரண்டு, மூன்று நிறங்களின் கலவையில், துறுதுறுவென இருந்தால், அப்பப்பியின் தலைமுறை பற்றி அறிந்து கொண்டு வாங்கலாம்.
கே.சி.ஐ., சான்றிதழ் பெற்ற பப்பி வாங்கும் போது, மரபு ரீதியாக ஏதேனும் நோய்கள், குறைபாடுகள் இருக்கிறதா என தெரிந்து கொள்ள முடியும்.
சிறிய வகை பப்பி என்பதால், அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்தால், எளிதில் உடல் பருமனாகிவிடும். இதனால், கால் எலும்புகள் பாதிக்கப்படலாம்.
செல்லப்பிராணியாக பப்பி வளர்ப்பவர்கள், அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதால், ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பப்பியை தற்காத்துக்கொள்ள முடியும்.
பிசான் பிரைஸ் (Bichon Fries)
'வெள்ளாவி வைத்து வெளுத்தது போல' துாய வெண்மை நிறத்தில் இருக்கும். பிற நிறங்களில் இப்பப்பி பிறப்பதில்லை. இந்த நிறத்திற்கேற்ப, காஸ்ட்லியாக விற்கப்படுகிறது.
இதன் கண்களில் இருந்து, வெளியேறும் கண்ணீரை துடைக்காமல் விட்டுவிட்டால், அது சிவப்பு நிறமாக மாறிவிடும்.
வெயில் காலங்களில் இப்பப்பி தங்குமிடத்தில், 'ஏ.சி.,' அல்லது மின்விசிறி பொருத்துவதோடு, காற்றோட்டமான சூழலை அமைத்து தருவது அவசியம்.
இது, 12-13 இஞ்ச் அளவு வரை வளரும். ஐந்து கிலோவிற்கு கீழ் இருந்தால் தான், சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும். இதன் தலை, வட்ட வடிவில் மற்ற டாய் வகை பப்பிகளை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும்.
இந்த பப்பியை வாங்குவோர், அதனுடன் கட்டாயம் ஒரு மணி நேரமாவது செலவழிக்க வேண்டும். இல்லாவிடில், மன அழுத்தத்திற்கு ஆளாகி, அக்ரசிவ்வாக மாறிவிடும்.

