ADDED : மே 04, 2024 08:57 AM

வெப்ப அலைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், நாம் சுருண்டு விழும் நிலையில், இன்று முதல் கத்திரி வெயிலும் சேர்ந்து, பாடாய்படுத்த காத்திருக்கிறது. வெயிலின் தாக்கத்தால், செல்லப்பிராணிகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பதோடு, ஹீட் ஸ்ட்ரோக், காய்ச்சலால் அவதிக்குள்ளாகி இறப்பை தழுவும் அபாயமும் தொடர்கிறது. வெயிலின் கொடூர பிடியில் இருந்து, செல்லப்பிராணிகளை எப்படி பதுகாப்பது என, மருத்துவர்களிடம் கேட்டோம். அவர்களின் அறிவுரைகள் இதோ:
உடல் வெப்பநிலை
வேகமாக மூச்சுவிடுதல், எச்சில் அதிகமாக ஒழுகுதல் போன்ற அறிகுறிகளால், நாயின் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதை அறியலாம். முதலுதவியாக, பப்பியாக இருந்தால், ஈரத்துணி கொண்டு துடைத்து விட வேண்டும். வளர்ந்த நாய்களாக இருந்தால், தண்ணீரை அதன் மீது ஊற்றினால், சிறிது நேரத்தில் உடல் வெப்பநிலை குறையும்.
106 டிகிரிக்கு மேல், உடலின் வெப்பநிலை இருந்தால், முதலுதவிக்கு பின், உடனே மருத்துவரை அணுக வேண்டும். 108 டிகிரிக்கும் மேல் அதிகரித்தால், உள் உறுப்புகள் பாதிப்படைந்து, இறப்பை தழுவும் அபாயம் உள்ளது. உடல் சூட்டை குறைக்க எக்காரணம் கொண்டும், ஐஸ் கட்டிகள் கொண்டு, அதன் தோலில் தடவக்கூடாது. இது, எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும்.-டாக்டர் எம். அரேஸ்குமார், கால்நடை மருத்துவர், வேலுார்.
முடியால் ஆபத்து
அதிக முடி மற்றும் சப்பை மூக்கு கொண்ட நாய்களுக்கு, உடலின் வெப்பம் தோலுக்கு அடியில் தேங்கிவிடுவதால், வெயில் காலங்களில் மிகவும் சிரமப்படும். அதிகாலை மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின், வாக்கிங் அழைத்து செல்வதே சிறந்தது. அடிக்கடி குளிர்ந்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.
ஜூஸ், எலக்ட்ரால் பவுடர் போன்றவை, மதிய நேரத்தில் குடிக்க கொடுப்பதால், உடல் வெப்பநிலையை சமன் செய்யலாம். செல்லப்பிராணி இருக்கும் இடத்தில், எந்நேரமும் ஏசி அல்லது பேன் இயங்கி கொண்டே இருப்பது அவசியம். மிகுந்த சோர்வு, மயக்கம், அதிகமாக மூச்சுவிடுதல், இதய துடிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் ஏ.சூசன், கால்நடை மருத்துவர், சென்னை.
அதீத உடற்பயிற்சி
வெயில் காலங்களில், நாய்களுக்கு அதீத உடற்பயிற்சி கூடாது. நிழலான இடத்தில், சிறிது நேரம் ரிலாக்ஸாக நடப்பதே போதுமானது. முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல வேண்டாம். அவசர காரணங்களுக்காக செல்வதாக இருந்தாலும், காருக்குள் அவை நீண்ட நேரம் இருக்கும் பட்சத்தில், 'ஏசி' போடுவது, ஜன்னல் திறந்து வைப்பது அவசியம்.
இல்லாவிடில், நின்று கொண்டிருக்கும் காரின், உள் வெப்பநிலை அதிகரித்து, நாய்கள் 'ஹீட் ஸ்ட்ரோக்'கால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மதிய நேரத்தில், பழங்கள், குளிர்ச்சியான தண்ணீர் கொடுக்கலாம். வெயில் காரணமாக, வாந்தி, பேதி, வலிப்பு, மூக்கிலிருந்து ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம்.- டாக்டர் எஸ்.சங்கர், கால்நடை மருத்துவர், சென்னை.