இயற்கையில் மனம் இளைப்பாற உயிர்களுடன் நாம் உறவாட...!
இயற்கையில் மனம் இளைப்பாற உயிர்களுடன் நாம் உறவாட...!
ADDED : நவ 15, 2024 11:25 PM

''கரிசல் மண் காடுகளை கால்களால் அளந்து, தேடியெடுத்த ஒற்றை மயிலிறகை, புத்தகத்திற்குள் வைத்து அடைகாத்தது... பொன்வண்டுகளை காலி தீப்பெட்டிகளில் நிரப்பி அடிக்கடி திறந்து பார்த்தது... வண்ணத்துப்பூச்சியை துரத்தியது... தட்டான்களோடு இரவில் சண்டையிட்டது... தவளைகளாய் மாறி தத்தி விளையாடியது...!
என, பால்யகால பசுமையை எழுத, எனக்கு நிறைய இருக்கிறது. விர்ச்சுவல் உலகத்திற்குள் தொலைந்துவிட்ட இன்றைய இளம்தலைமுறைக்கு, இதெல்லாம் கனவில் கூட சாத்தியப்படாதோ என்ற, சிறு நினைவுக்கீறலின் நீட்சியாக விரிந்தது தான் இந்த 'பண்டேரா பார்க்,'' என்கிறார், அதன் நிறுவனர் விசாக்நாத்.
'செல்லமே' பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:நான் பிரான்ஸ் நாட்டில், விண்வெளி கட்டமைப்பு குறித்த முதுகலை படிப்பு முடித்து, அங்கேயே ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தேன்.
சொந்த ஊரில், இயற்கை சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், வித்தியாசமான பிசினஸ் துவங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. சின்ன வயதில் இருந்தே மரங்கள், பறவைகள், விலங்குகளை பற்றி, தேடி தேடி படிப்பதும், அவைகளோடு நேரம் செலவிடுவதும் பிடிக்கும். இவைகளை ஒரே இடத்தில் வைத்து பராமரித்தால், எப்படி இருக்கும் என்ற எண்ணம் மட்டும், ஓடிக்கொண்டே இருந்தது.
கடலுக்கடியில் வசிப்பவை முதல் வானில் பறப்பவை வரை, அனைத்தையும் ஒரே இடத்தில் வளர்க்க முடிவு செய்து, ஏலகிரி மலையின் வளைவான ரோடுகளில், பந்தலாய் விரியும் மரங்கள், பனிவிழும் மலைத்தொடர் என, எழில் கொஞ்சும் நிலாவூர் கிராமத்தில், இரு ஏக்கரில், பண்டேரா பார்க் (Fundera Park), கடந்த, 2017ல் உருவாக்கினேன்.
இங்கே, செயற்கை பனித்துாறல் அமைப்பு உள்ளது. சாரலில் சிலிர்த்தபடியே, பார்க்கினுள் நுழைந்தால், குகையை குடைந்தாற்போன்ற அமைப்புடன், அக்குவாரியம் இருக்கும். உங்களின் தலைக்கு மேலே, நீந்தும் வண்ணமீன்களை, அன்னார்ந்து பார்த்து அளாவியபடியே, குளத்தில் துள்ளி விளையாடும், 'கொய்' மீன்களுக்கு உணவளிக்கலாம். கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட வெரைட்டி மீன்கள், டேங்கில் இருந்தபடியே உங்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்கும்.
இதோடு ஆமை, தவளை, பாம்பு, கோழி, குரங்கு, ரக்கூன் மட்டுமல்லாமல், 10 வகையான முயல், எட்டு வகையான எலி, ஈமு கோழி, நெருப்புக்கோழி, ஒட்டகம், குதிரை, புங்கனுார் குட்டை ரக மாடு, கழுதை, குட்டை வெள்ளையாடு என சிறியதும், பெரியதுமான தரைவாழ் விலங்குகளை ஒரே இடத்தில் காணலாம். இதற்கிடையே, ஹஸ்கி, சிட்ஜூ, மின்பின் பப்பிகளை கொஞ்சிவிட்டு செல்பி எடுத்து, நினைவுகளை பத்திரப்படுத்தி கொள்ளலாம்.
ஆயிரம் மரங்கள் அசைந்தாடி வரவேற்கும் குறுங்காட்டிற்குள் நுழைந்து, உங்கள் ஆயுளுக்கும் தேவையான ஆக்ஸிஜனை நுரையீரலுக்குள் நிரப்பி கொள்ளலாம். பறவைகளுக்கென பிரத்யேக இடம் இங்குள்ளது. பிஞ்சர், காக்டெய்ல், ஆப்ரிக்கன் லவ் பேர்ட், பட்ஜீஸ், மக்காவ், காக்கட்டூ, அமேசான் பேரட், கனுார்ஸ் என, 30-40 வெரைட்டி பறவைகள் நிறைந்த சரணாலயத்திற்குள் நுழைந்தால், நீங்களே பறவையாய் மாறி, பறப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இதுதவிர, 7-டி தியேட்டர், ட்ரைன் டெய்டு, நெட் கிரிக்கெட், பிஷ் ஸ்பா என, காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, உங்களுக்கான நாளை கொண்டாடவும், குதுாகலிக்கவும் ஏராளம் இங்குண்டு. குழந்தைகளோடும், நண்பர்களோடும், ஒருமுறை இங்கே வந்து, விசிட் அடித்து பாருங்களேன்.
தொடர்புக்கு: 95007 68688

