தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!

கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!

கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!


ADDED : பிப் 01, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்டிமன்ற நடுவர், நடிகர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியர் கலைமாமணி கு.ஞானசம்பந்தன் உலகம் எங்கும் சென்று தமிழ் மணம் பரப்பி வருகிறார். தமிழ்ப்பணிக்கு செல்லும் போது, அந்நாடுகளின் பண்பாட்டு, கலை சார்ந்த இடங்களையும் சென்று பார்வையிடும் 'பண்பாட்டு பயணியாகவும்' மாறி விடுவார்.

அண்மையில் கம்போடியா சென்று வந்ததை நம்மோடு பகிர்கிறார்...

நான் கம்போடியா வந்திருக்கிறேன் என்று தொலைபேசியில் சொன்னபோது, ஓஹோ. காம்போஜ தேசத்தில் இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு, கம்போடியாவின் பெருமைகளை கதையாக சொன்னார் என் நண்பர் கமல்ஹாசன். இதை கேட்ட போது கம்போடியாவை காணும் ஆவல் இன்னும் பெருக்கெடுத்தது. இப்படி நாங்கள் தொலைபேசியில் உரையாடியது எதைப்பற்றி தெரியுமா? சொல்லுகிறேன்...

பிரண்ட்ஸ் அசோசியேஷன் கம்போடியா அழைப்பின்பேரில் அவர்களின் நிகழ்ச்சி கம்போடியாவில் நிகழ்ந்தாலும் நானும் மனைவியும் முதலில் சென்றது அங்கோர்வாட் சியாம் ரீப் (Siem Reap) நகருக்குத்தான். அங்கோர்வாட் கோயில்களைப் பார்க்கவேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை.

மூன்று கோயில்கள் நடுவில் சூரியன் கன்னியாகுமரியில் சூரியஉதயம் பார்ப்பதைப்போல அங்கோர்வாட் கோயில்களுக்குப் பின்னால் சூரியஉதயத்தைப் பார்ப்பது சிறப்பு என்று நண்பர் சொன்னதால் அதிகாலை நான்கரை மணிக்கே அங்கு புறப்பட்டுச் சென்றோம். மார்ச்சில் இரவும் பகலும் சமமாய் இருக்கிற நாளில் சூரியன் மிகச் சரியாக இம்மூன்று கோயில்களுள் நடுவில் உள்ள விஷ்ணுகோயிலின் பின்புறம் தோன்றுமாம். வானவியல் கோள்களின் இயக்கத்திற்கு ஏற்ப கோயில் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இக்கோயில் 1113 முதல் 1150 வரையிலான ஆண்டுகளில் அப்போதைய மன்னரான விஜயசூர்யவர்மனால் கட்டப்பட்டிருக்க வேண்டும். 162 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான அகழியும் அதில் நீர் நிறையும்போது முதலைகளும் தோன்றும். கோயில்களில் வேயப்பட்டிருந்த தங்கக்கூரை போர்களால் அழிந்து போயிருக்கிறது.

அரசிகள் ஆண்ட நாடு ஒரு காலத்தில் அரசிகளால் ஆளப்பட்டிருக்கிறது அந்நாடு. பின்னர் சோழ இளவரசர் ஒருவர் அந்நாட்டிற்கு வந்தபோது அவரது வீரத்திலும் அழகிலும் மயங்கிய அரசி அவரை மணம்புரிந்ததாகவும், அதன்பின் அந்த வம்சாவளியிலே வந்த மன்னர்கள் இதனைக் கட்டினார்கள் என எங்களிடம் சொன்னார் அங்கு வந்த சுற்றுலாகைடு.

எங்கள் மொழி தமிழ், சமஸ்கிருதம் கலந்த 'கம்மீர் மொழி' என்று அவர் சொன்னதை கேட்கும் போது இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போன்ற உணர்வு எனக்கு! அங்கோர் என்றால் நகரம், வாட் என்றால் கோயில், அதனால் அந்த நகரம் அங்கோவார்ட் ஆனது. 'நகரம்' என்ற சொல் கம்மியா மொழியில் இருந்துள்ளது.

கோயில், சுற்றியுள்ள அரண்மனையில் அரசனும், அரசியும் நீராட நீச்சல் குளமும் சுற்றுச் சுவருக்கு வெளியே மற்றவர்களுக்கான நீச்சல் குளமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கான நூலகம், அரசகுடும்பத்திற்கான நுாலகம் இருக்கிறது. ஆனால் நுால்கள் ஏதும் இல்லை.

கோயிலின் நீண்ட உட்புறச் சுவர்கள் முழுவதும் ராமாயண, பாரதக்கதைகள் செதுக்க பட்டிருப்பது வியப்புக்குரியது. கோயிலைச் சுற்றிய ஆறடி சுற்றுச்சுவர் முழுவதும் அனகோண்டா பாம்பு படுத்திருப்பதைப்போல அமைத்து அதன் முடிவில் ஏழுதலை நாகம் படமெடுத்து நிற்பதைப்போல் அமைத்திருக்கின்றனர். இவையெல்லாம் பார்க்கப் பார்க்க வியப்பு!

தேவதைகளின் திருக்கூடம் இந்தநேரத்தில் நான் தொல்லியல்துறை நண்பரான வேதாசலத்தை தொடர்பு கொண்டு அங்கோர்வாட்டில் வேறு எந்த கோயிலைப் பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர் அங்கே சிவன் கோயிலைப் பார்த்து வாருங்கள்; காரைக்கால் அம்மையாரின் சிற்பம் இருக்கிறது என்று சொன்னார். உடனே 70 கி.மீ., துாரத்தில் உள்ள அந்த கோயிலுக்கு புறப்பட்டோம். அந்த இடத்திற்கு பேன்டே சிரே (Banteay Srei) என்று பெயர். இதற்கு 'தேவதைகளின் திருக்கூடம்' என்பது பொருளாம். அந்த சிவன் கோயிலில் எந்தச் சிலையும் இல்லை, சுற்றுச்சுவரும் இல்லை. சிவன் கோயிலுக்கான அடையாளமாகத் தலை உடைக்கப்பட்ட நந்தியின் உருவமும், கருவறையும் உள்ளன.

இந்தக் கருவறையின் வெளிப்புற மேல்புறத்தைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி. காரணம் அங்குதான் சி வபெருமான் நடனமாட, காரைக்கால் அம்மையார் அமர்ந்து அந்தத் திருநடனத்தைக் காணும் சிற்பத்தைக் கண்டேன். ஆம்..நம் திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் காணுகின்ற சிவநடனம்தான் அந்தக் காட்சி. இதில் ஒரு ஆச்சர்யம்.இந்தக் கோயில் கட்டப்பட்ட ஆண்டு 9ம் நுாற்றாண்டு. காரைக்கால் அம்மையாரின் கதை உட்பட நாயன்மார்களின் வரலாறாகிய பெரியபுராணம் சேக்கிழாரால் 12ம் நூற்றாண்டில்தான் எழுதப்படுகிறது.

ஆடல்வல்லானின் திருவுருவம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர் காரைக்கால் அம்மையார் என்பதும் அவர் எழுதிய பதிகங்கள் மூத்தத் திருப்பதிகங்கள் என்பதையும் நாம் அறிவோம். இப்படி இருக்க 9ம் நுாற்றாண்டிலேயே இந்தக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியப்புற்றோம்.

மற்றொருபுறத்தில் வாலி- சுக்ரீவன் போர் செய்யும் காட்சியும் ராமன் லட்சுமணனோடு நின்று வில் வளைக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறன. இரணியவதையும், ராவணன் கைலாச மலையைத் தூக்கிய கதையும் அங்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கிருந்த ஆடல்வல்லானின் திருவுருவம் லண்டன் மியூசியத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் சென்ற ஆண்டு லண்டன் சென்றபோது அங்கு ஆடல்வல்லானின் சிலையைப் பார்த்தேன். ஆனால் இவர் கம்போடியாவில் இருந்து வந்தவர் என்று அங்கு குறிப்பு இல்லை. இந்த கோயில்களை எல்லாம் பார்த்து விட்டு மதுரைக்கு திரும்பும் விமானப் பயணம் முழுவதும் கண்களில் நிறைந்தே தொடர்ந்தன... அங்கோர்வாட் மூவர்கோயிலும், ராமாயண பாரதக் கதைகளும், காரைக்கால் அம்மையாரின் வடிவமும்! காலப்பயணம் எப்போதும் நமக்கு இனிமையை அளிக்கிறது. அவசியம் ஒருமுறை அங்கோர்வாட் சென்று வாருங்கள் என்கிறார் கு.ஞானசம்பந்தன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us