ADDED : டிச 28, 2024 06:48 AM

குட்டி மீசையுடன், எலி போன்ற முகம், அணிலின் மிருதுவான மேனி, நீண்ட வாலுடன் கூடிய மைக்ரோ அணிலுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்கிறார், திருப்பூரை சேர்ந்த பிரசன்னா.
அரிய வகை செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் கூறியதாவது: 'ஆப்ரிக்கன் டோர் மைஸ்' என அழைக்கப்படும் மைக்ரோ அணிலை தேடி வாங்கி வளர்ப்போர் அதிகம். இரு ஆண்டுகளாக, இதை வளர்க்கிறேன். இதன் குட்டிகளை, முன்பே ஆர்டர் செய்து நட்பு வட்டாரங்களில் வாங்கி செல்கின்றனர். அந்தளவுக்கு மவுசு உள்ளது.
கிட்டத்தட்ட 6-9 செ.மீ., நீளமே வளருவதோடு, அதிகபட்சம், 30 கிராம் எடை கொண்டது. துறுதுறுவென ஆக்டிவ்வாக இருக்கும். பராமரிக்க பெரிதளவில் மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு மாதம் வரை மட்டும், வெதுவெதுப்பான தண்ணீரில், உடலை துடைத்துவிட்டால் போதும். பின், இதற்கான கூண்டில் தண்ணீர் வைத்தால், தாமாகவே உடலை நனைத்து சுத்தப்படுத்தி கொள்ளும்.
இது, வெஜிட்டேரியன் என்பதால் விதை நீக்கப்பட்ட பழங்களை விரும்பி சாப்பிடும். குளிர், மழை காலங்களில் மட்டும், சற்று வெதுவெதுப்பான சூழலை அமைத்து தர வேண்டும். இதை கையில் எடுத்து உணவளித்து பழக்கிப்படுத்தினால், வீட்டை விட்டு எங்கும் செல்லாது. ஒரு ஆண், பெண் மைக்ரோ அணில் வாங்கி வளர்த்தால்  ஏழு மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும். அதிகபட்சம் 30-35 நாட்களில் குட்டி பிறக்கும்.
இதன் குட்டிகள் மிக சிறியதாக இருப்பதால் கையில் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது. பிறந்து இரு வாரங்களுக்கு பின், கண்கள் திறந்து உலகை பார்க்க ஆரம்பித்துவிட்டால், தாமாக உணவு சாப்பிடும் பருவத்தை அடைந்துவிடும். இது அதிகபட்சம் 5-8 ஆண்டுகள் வரை வாழும். உரிமையாளரின் குரல் கேட்டு, துள்ளலோடு விளையாட அழைப்பதால், பலரும் இதை செல்லப்பிராணியாக வளர்க்க ஆசைப்படுகின்றனர்.

