ADDED : ஜூன் 13, 2025 10:30 PM

''மிருதுவான தன் சிறகை விரிக்கும் போது, தலைக்கு மேலே சிலிர்த்தபடி நேராக எழும்பி நிற்கும் கொண்டை தான், காக்கட்டூ பறவைக்கான தனித்துவ அடையாளம். இதன் வண்ணம், அளவை பொறுத்து, 21 வகையாக பிரிக்கப்படுகிறது,'' என்கிறார், கோவை, 'எஸ்.கே., பேர்ட்ஸ் பார்ம்' உரிமையாளர் கண்ணன்.
காக்கட்டூ பராமரிப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட இது, நடுத்தர அளவில், பல்வேறு வண்ணங்களில் இருக்கிறது. இதன் தலை மேல் இருக்கும் கொண்டை நிறம் மற்றும் அளவை பொறுத்து, 21 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உடல் முழுக்க வெள்ளையாக, கொண்டை மட்டும் மஞ்சள் நிறத்தின் இருப்பின் மஞ்சள் கொண்டைகிளி எனவும், கண்களை சுற்றி ஊதா நிறத்தில் வளையம் போல இருந்தால் ஊதா கண் கொண்டைகிளி, குடை போல சிறகு விரித்திருக்கும் பறவையை வெள்ளை கொண்டைகிளி எனஅழைக்கப்படுகிறது.
கொண்டை, கண், கழுத்து பகுதிகளில் மட்டுமே நிறம் மாறுபடுகிறது. நடுத்தர அளவு கொண்ட கொண்டை கிளி வாங்கினால், 5 அடி அளவுள்ள கூண்டும், பெரிய அளவிலான இக்கிளிக்கு 7 அடி கூண்டும் இருந்தால் தான் அவை விளையாட வசதியாக இருக்கும்.
இது, மற்ற பறவைகளுடன் சேர்ந்து விளையாடும். இதற்கு, சிறியதாக இருக்கும் போதே பழக்கப்படுத்த வேண்டும். இக்கிளி பிறந்து ஒரு மாதத்திற்கு பின், கையில் வைத்து உணவு கொடுத்தால், உரிமையாளருடன் நெருங்கிவிடும்.
அதி புத்திசாலியான கிளி என்பதால், எதை கற்று கொடுத்தாலும் எளிதில் உள்வாங்கி கொள்ளும். வீட்டிலுள்ளோர் பேசினால், கொஞ்சும் மொழியில் இதுவும் பேசும். நன்கு பழக்கப்படுத்திய பிறகு, கூண்டு திறந்திருந்தாலும், வீட்டை விட்டு வெளியே பறக்காது.
கொண்டை கிளிக்கு மவுசு அதிகம். இதன் விலை, 75 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்பதால், சிறியதாக இருக்கும் போதே, வளர்க்கும் பட்சத்தில், அத்தலைமுறையோடு உணர்வு பந்தத்தை உருவாக்கி கொள்ளும்.
எப்போதும் விளையாடி கொண்டும், பேசி கொண்டும் இருப்பதால், தன் உரிமையாளர்எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும், அதை நொடியில் மறைய செய்து, மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிவிடும்.