ADDED : நவ 01, 2024 11:37 PM

''தனி ஒருவனுக்கு உணவில்லையேல்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்ற பாரதியின் வரிகள், மனிதர்களுக்குமட்டுமானதல்ல... மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும். தலைநகரின் வீதிகளில், பட்டினியால் வாடும், வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க ஏற்றிய அடுப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒருநாள் தவறாமல் எரிந்து கொண்டே இருக்கிறது. இங்கு சமைக்கப்படும் உணவால், தினசரி 4,000 தெருநாய்களின் பசியாற்றுகிறோம்,''என்கிறார் 'ஹெவன் பார் அனிமல்' (Heaven For Animal) தன்னார்வ அமைப்பின் மேலாளர் ரஷீத்.
சென்னை, அண்ணா நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தும் இவர், விலங்குகள் நல ஆர்வலரும் கூட.தெருநாய்களுக்குஉணவளிக்கும் பணியில், மும்முரமாகஈடுபட்டு கொண்டிருந்தஇவரை தொடர்பு கொண்டோம். 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் மனம் திறந்தார்.
தன்னார்வ அமைப்பு பற்றி?
கொரோனா சமயத்தில், ஒருவேளை சாப்பிட கூட உணவு கிடைக்காமல், பல இடங்களில், தெருநாய்கள், பூனைகள் பட்டினியால் இறப்பதாக தகவல் கிடைத்தது. அச்சமயத்தில், தனி ஒருவனாக தினசரி, 300க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு உணவளித்தேன். ஓட்டலில் உணவு வாங்க ஆகும் பெரும் பொருட்செலவை கருத்தில் கொண்டு, 2021, ஆக., 28ல், அண்ணாநகரில், 'கிளவுட் கிச்சன்' முறையை துவக்கினேன்.
இங்கிருந்து தினசரி, 250 கிலோ அரிசி, 100 கிலோ இறைச்சியில், சராசரியாக, 4,000 தெருநாய்களுக்கு உணவு தயாரித்தோம். இதை இலவசமாக தன்னார்வலர்கள் மூலம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு வழங்கினோம்.இது தற்போதும் தொடர்கிறது.
பறவை, நாய், ஆடு, மாடுகளின் தாகம் தீர்க்க, தமிழகம் முழுக்க, 5 லிட்டர், 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 9 ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் வழங்கியிருக்கிறோம். ரேபிஸ் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, ஆயிரக்கணக்கான தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவின் போது, தன்னார்வலர்களுடன் கைக்கோர்த்து, விலங்குகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். விலங்குகள் பாதிக்கப்படும் பட்சத்தில், இலவசமாக சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்குகிறோம்.எங்கள்அமைப்பின் வாயிலாக, சென்னை, ஐகோர்ட்டில் மட்டும், விலங்குகள் வதை தடைச்சட்டத்தில், 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்கால திட்டம்?
தற்போது சென்னையில் மட்டுமே, கிளவுட் கிச்சன் செயல்படுகிறது. இதை தமிழகம் முழுக்க மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் தன்னார்வலர்களின் உதவியோடு விரிவுப்படுத்த வேண்டும்.
தெருநாய்களுக்கான சிகிச்சை மையம் அமைத்தல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வது, தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளை, மேலும் விரிவுப்படுத்த வேண்டும்.
பொதுமக்களிடம் எதிர்பார்ப்பது?
நாய், பூனை, பறவை, ஆடு, மாடு என உங்களின் வீட்டருகில் இருக்கும் ஜீவன்களுக்குஉணவு, தண்ணீர் அளியுங்கள். மற்ற ஜீவன்கள் இல்லாவிடில், இந்த பூமி, மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறிவிடலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தொடர்புக்கு: 95853 38338
உலகினில் மிக உயரம்...
மனிதனின் சிறு இதயம்!

