
மனிதர்களை போலவே பப்பிகளுக்கு வரும் சில நோய்களுக்கும் ஆயுள் முழுக்க, மருந்து, மாத்திரை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வரிசையில் முன்னிலையில் இருப்பது, நாய்களுக்கான இருதய நோய்.
நாய்களுக்கு சமீபத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது, டி.சி.எம்., (Dilated Cardio Myopathy) எனும், இருதயத்தின் அளவு பெரிதாவது மற்றும் எம்.வி.டி., (Mitral Valve Disease) எனும், இருதய வால்வு பகுதியில் பாதிப்பு ஏற்படுவது ஆகும்.
இதில், டி.சி.எம்., பாதிப்பு பெரிய வகை நாய்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. லேப்ரடார், டாபர்மேன், கிரேட்டேன் இன பப்பிகளுக்கு, இருதயத்தின் அளவு பெரிதாகும் வாய்ப்பு, அதிகளவில் இருப்பதாக, மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில், சிட்ஜூ, பொமரேனியன் வகையான ஸ்பிட்ஸ் பப்பிகளுக்கும், அதிகளவில் இப்பாதிப்பு இருப்பதை காண முடிகிறது. இந்த இன பப்பிக்கு, 5-6 வயதில் இருதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதேபோல, எம்.வி.டி., பாதிப்பு, சிறிய ரக பப்பிகளுக்கு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பொதுவாக, 7-8 வயதுக்குள், 'எக்கோ கார்டியோ கிராபி'பரிசோதனை வாயிலாக, பப்பியின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்து கொள்ளலாம். எக்ஸ்ரே எக்ஸ்ரேயில், இருதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிந்து கொள்ளலாம்.
வேகமாக இருமுதல், திடீரென மயங்கி விழுந்து ஓரிரு வினாடிகளில் இயல்பு நிலைக்கு திரும்புதல், வழக்கமான வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுதல் போன்றவை, இருதய நோய் இருப்பதற்கான அறிகுறிகளாகும். இப்பாதிப்பு ஏற்பட, அதீத உடல் எடை, எந்த பயிற்சியும் இல்லாமல் இருப்பது, கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவது போன்றவை முக்கிய காரணமாக உள்ளது.
மரபு ரீதியாக, பெற்றோரிடம் இருந்து, வாரிசுகளுக்கு இந்நோய் ஏற்படும் என்பதால், பப்பி வாங்கும் போதே, அதன் பெற்றோரின் ஹெல்த் ரிப்போர்ட்டை அறிவது அவசியம். மேலும், இவ்விரு வகையான இருதய பாதிப்புக்கும், ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிடுவது மட்டுமே தீர்வாக உள்ளதால், வரும்முன் காப்பதே சிறந்த வழியாகும்.
தொடர்புக்கு: madhumithacm 27@gmail.com
- சி.எம்.மதுமிதா,
கால்நடை உதவி மருத்துவர், சென்னை.