ADDED : மார் 29, 2025 06:25 PM

''செல்லப்பிராணிகளுக்கு ஆடை அணிவிப்பதும், அழகுபடுத்துவதும் அதிகரித்துவிட்ட சூழலில், பேஷன் துறைக்கு, நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறுகிறார், மும்பையை சேர்ந்த, 'தி பாபாவ் கேர்டல்' நிறுவனர் பரஸ் பானுஷாலி.
செல்லமே பக்கத்திற்காக இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
கொரோனா தொற்றுக்கு பின், செல்லப்பிராணி வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தனிமை, பகிர்வு, மன அழுத்தம், துணையாக இருத்தல், என பல காரணங்களுக்காக, தேடி வாங்கும் செல்லப்பிராணி, சில நாட்களிலே, குடும்பத்தின் முக்கிய அங்கத்தினராக மாறிவிடுகிறது. அவை இல்லாமல், எதுவும் இல்லை என்ற நிலைக்கு, நம்மை மாற்றிவிடுகிறது. குடும்பத்தின் சுப நிகழ்வுகளில், செல்லப்பிராணிக்கும் ஆடை அணிவிப்பது, அலங்காரம் செய்வது தற்போது டிரெண்டாகிவிட்டது.
இக்கலாசாரம் மெல்ல தலை துாக்க துவங்கிய காலத்திலேயே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 'தி பாபாவ் கேர்டல்' (The Papaw Cartel) என்ற செல்லப்பிராணிகளுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவனத்தை துவக்கினோம். என் செல்லப்பிராணியான பெல்லாவுக்கு அளவெடுத்து தைத்து, அணிவித்து, அது சவுகரியமாக இருக்கிறதா எனஅறிந்த பிறகே, மார்கெட்டிங் செய்ய துவங்கினோம்.
காட்டன் ஆடைகளில், கோட் சூட், காக்ரா சோலி, சர்வானி, பந்தானா, பவ்ஸ் ஆகியவை தைக்கிறோம். கையால் எம்பிராய்டரி செய்து தருவதால், வித்தியாசமான, புதுமையான டிசைனாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சியில், எங்கள் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், பிசினஸை விரிவாக்கிவிட்டோம். இணையதளம் வாயிலாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன.
செல்லப்பிராணிக்கு ஆடை அணிவித்த பிறகு, அது சவுகர்யமாக இருப்பதாக உணர ஆரம்பித்துவிட்டாலே, வாடிக்கையாளர்கள் தேடி வருவர். இத்துறைக்கு, நல்ல எதிர்காலம் இருக்கிறது. பேஷன் டிசைனிங் படித்தோர், ஆர்வமுள்ளோருக்கு, இத்துறையில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.