ADDED : மே 31, 2025 06:57 AM

''அதீத குறும்புத்தனம் இல்லாமல், வீட்டிற்குள்ளே அமைதியாக வலம் வரும் ஒரு மியாவ்வை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்பினால், பெர்ஷியன் பூனை தான் சிறந்த தேர்வாக இருக்கும்,'' என்கிறார் சென்னையை சேர்ந்த ப்ரீடர் அஹமது.
பெர்ஷியன் இன பூனைகளின் இயல்பு, பராமரிப்பு பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
தட்டையான முகம், பெரிய வட்டமான கண்கள், நீண்ட, மிருதுவான முடி என, வித்தியாசமான தோற்றத்துடன் காணப்படும் பெர்ஷியன் பூனைகள், வீட்டில் செல்லப்பிராணியாக வைத்து வளர்க்க ஏற்றவை. இவை, சுறுசுறுப்பாக இருந்தாலும், குறும்புத்தனம் இன்றி, அதிக சத்தம் எழுப்பாமல், வீட்டிற்குள்ளே அமைதியாக வலம் வரும்.
இவ்வகை பூனையின், முக அமைப்பை பொறுத்து, 'டால் பேஸ்', 'செமி டால் பேஸ்', 'செமி பஞ்ச் பேஸ்', 'புல் பஞ்ச் பேஸ்', ' எக்ஸ்ட்ரீம் பஞ்ச் பேஸ்' என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவை பொதுவாக, 12-17 ஆண்டுகள் வரை உயிர்வாழும். முறையாக பராமரித்தால், சராசரி ஆயுட்காலத்தை தாண்டியும் உயிருடன் இருக்கும்.
உடல் முழுக்க புஸூ புஸூவென, மென்மையான முடியுடன், ஒய்யாரமாக வலம் வரும், இப்பூனைக்கு தினசரி சீவி விடுவது, கண்கள், காதுகளை சுத்தப்படுத்துவது அவசியம்.
தட்டையான முக அமைப்பு இருப்பதால், இதற்கு சுவாச ரீதியான பிரச்னைகள் ஏற்படலாம். மூச்சுவிடும் போது சத்தம் எழுப்புவது, மூச்சு திணறல், குறட்டை போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம்.
இவை வெளிநாட்டு இன பூனை என்பதால், பருவநிலை மாறும் போதெல்லாம், உணவு முறையை மாற்றுவது அவசியம். வெயில் காலத்தில், காற்றோட்டமான இடவசதி, ஈரப்பதமுள்ள உணவு, சுத்தமான தண்ணீர் வைப்பது அவசியம். அதிக முடி இருந்தால், வால் பின்புறம், அடிவயிறு பகுதிகளில் சிறிதளவு வெட்டிவிடலாம்.
இதேபோல, மழை, குளிர் காலம் துவங்கும் போதும், பூனையிடம் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, அதன் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக தண்ணீர் எடுத்து கொள்ளாவிடில், இந்த வகை பூனைக்கு சிறுநீரக தொற்று ஏற்படலாம். இதில் அலட்சியம் காட்டினால்,நோயின் தன்மை தீவிரமடைந்து, கிட்னி பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதேபோல, கண்களில் இருந்து வெளியேறும் திரவத்தை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இதற்கென தினசரி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கினால் தான், அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகை செய்ய முடியும்.
பொதுவாக இவை, 6 மாத குட்டி முதல் ஓராண்டு வரை நல்ல சுறுசுறுப்பாக இருக்கும். இச்சமயத்தில், அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள் கொடுப்பதன் வாயிலாக, அதன் எலும்பு, தசை வளர்ச்சியை உறுதி செய்யலாம். ஓராண்டுக்கு பின், இதன் தினசரி ஆக்டிவிட்டி குறைந்துவிடும் என்பதால், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைப்பது நல்லது. இல்லாவிடில், எளிதில் உடல் பருமனாகிவிடும்.
'மணி அடித்தால் சாப்பாடு' என்ற பழமொழி பூனைக்கு தான் பொருந்தும். இதற்கு குறிப்பிட்ட நேர இடைவெளியை பின்பற்றி உணவு வைத்து பழக்கப்படுத்தினால், சற்று தாமதமாகிவிட்டாலும், சாப்பாடு வேண்டுமென்ற பாவனையோடு மியாவ் என கத்த தொடங்கிவிடும்.
எளிதில் வீட்டிலுள்ள அனைவரிடமும் நெருங்கிவிடும். நீங்கள் சோகமாக இருந்தால், விளையாட வருமாறு அழைத்து, உங்களின் மனநிலையை மாற்றிவிடும். எங்கே சென்றாலும் பின் தொடர்ந்து வந்து, செல்லமாக கூப்பிடும். இது வீட்டில் இருந்தால், ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.