ADDED : பிப் 15, 2025 07:50 AM

உண்ணி காய்ச்சல் முழுமையாக குணமாகாத பட்சத்தில், பப்பிகளுக்கு, ஐ.எம்.எச்.ஏ (Immune- Mediated Hemolytic Anemia) எனும், தன் ரத்த செல்களை தாமே தாக்கி கொள்ளும் ஒருவகை பாதிப்பு ஏற்படலாம். இப்பாதிப்பில், பப்பியின் ரத்த செல்கள், தம் உடலின் இயக்கத்திற்கு எதிராகவே வேலை செய்யும்.
அதாவது, ரத்த சிவப்பணுக்கள் உடைந்து, ரத்தசோகையை ஏற்படுத்தும். ரத்த செல்கள் உடைவதால், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை ஏற்படலாம். இவை, உயிருக்கே ஆபத்தான சூழலை ஏற்படுத்தி விடும்.
இப்பாதிப்பு இருக்கும் பப்பிகளின் சிறுநீரானது, ஆரஞ்ச் கலந்த சிவப்பு நிறத்தில் வெளியேறலாம். சோர்வுடன், பப்பி சாப்பிடாமல் இருக்கும். தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காததால், மூச்சுவிட சிரமப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம். ரத்த பரிசோதனைகள் வாயிலாக, இப்பாதிப்பு இருக்கிறதா என உறுதி செய்யலாம். உண்ணிக்காய்ச்சல் முழுமையாக குணமடையாத பப்பிகளுக்கு, இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், பல்வேறு காரணங்களாலும், ஐ.எம்.எச்.ஏ., பாதிப்பு பப்பிகளுக்கு ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பூடில், காக்கஸ் பேனியல், ஐரிஸ் ஷெட்டர் இன பப்பிகளுக்கு, ஐ.எம்.எச்.ஏ., பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே, மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், அலட்சியமாக இருக்கக்கூடாது. ரத்த செல்கள் குறைவதால், அடிக்கடி ரத்தம் மாற்றுவது உட்பட, பப்பியின் உடலில் வெளிப்படும் அறிகுறிகளின் தன்மைக்கேற்ப மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.
- ஈ.பிரதீப், கால்நடை மருத்துவர், திருப்பூர்.

