ADDED : நவ 09, 2024 09:13 AM

நான், நீண்டகால 'தினமலர்' வாசகன். தற்போது வெளியாகும், 'செல்லமே' பக்கத்தை முழுவதுமாக வாசித்து விடுவேன். இப்பக்கத்தில், எங்கள் வீட்டு செல்லப்பிராணியான 'சிம்பா' (சிட்ஜூ ப்ரீட்) போல, வித்தியாசமான முகபாவனைகளுடன் வெளியாகும் பப்பியின் புகைப்படம், பப்பிக்கான பயிற்சி, கென்னல் விபரங்கள், பப்பி டயட் பற்றிய செய்திகளை, புகைப்படம் எடுத்து, உடனே எங்கள் குடும்ப, நண்பர்களுக்கான, வாட்ஸ்-அப் குழுவில் பகிருவேன். குழுவில் உள்ள மற்றவர்களும், தங்கள் வீட்டு செல்லப்பிராணியின் சேட்டைகளை பட்டியலிடுவர். இந்த உரையாடலே, எங்களின் உறவை மேலும் வலுவாக்குகிறது.
எங்கள் வீட்டை பொறுத்தவரை, மனைவி, இரு மகள்கள், மருமகன்கள் என எல்லாருமே டாக்டர்கள். ஒருநாளின் பெரும்பகுதியான நேரம், நோயாளிகளுடனே செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு தீர்வாக, சிம்பா வாங்கினோம். இவனுக்கு தற்போது எட்டரை வயதாகிறது. இவன் வந்தபிறகு, வீட்டின் சூழலே மாறிவிட்டது. இவன் துள்ளல், சேட்டையால், எவ்வளவு மன அழுத்தம், பணிப்பளு இருந்தாலும், நொடியில் மறைந்துவிடுகிறது.
சிம்பா மிகவும் புத்திசாலியான பப்பி. நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அவனது பொம்மைகளை கொண்டு வந்து, விளையாடுமாறு அழைப்பான். வேலையில் மும்முரமாக இருந்தால், தொந்தரவே செய்ய மாட்டான். நாங்கள் வீட்டில் இல்லாத போது, வேலையாட்களை நோட்டமிடுவது, யாரேனும் புது ஆட்கள் வந்தால், உடனே குரைத்து காட்டி கொடுப்பது என, பட்டியலிட்டு கொண்டே போகலாம். எங்களை பார்த்து, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பப்பி வாங்கியிருக்கின்றனர்.
--- சவுந்தரராஜன், தலைவர், ஸ்ரீ மருத்துவமனை, கோவை.