ADDED : அக் 10, 2025 11:22 PM

''த ண்ணீரிலே நீந்தினாலும், உடலில் ஈரப்பதம் ஒட்டாத அளவுக்கு, அடர்த்தியான, சுருள் சுருளான முடியை கொண்ட, இந்த ஒயர்பாக்ஸ் டெரியர் அதீத புத்திசாலி என்பதோடு சிறிய இடத்திலும் வளர்க்க ஏற்றது,'' என்கிறார், கோவை, சூலுாரில் உள்ள 'பியர்டு மேன் கெனைன் டச்' (Beardman'sCanine Touch) உரிமையாளர் நந்தராஜ்.
தென்னிந்தியாவில் அதிகம் வளர்க்கப்படாத, அரிய வகை இனமாக கருதப்படும் 'ஒயர்பாக்ஸ் டெரியர்' பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கூறும் இவர், பயிற்சியாளரும் கூட. இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட, ஒயர் பாக்ஸ் டெரியர், அதன் முடியின் தன்மையை பொறுத்து, மென்மையான முடி மற்றும் அடர்த்தியான சுருள் சுருளான முடி கொண்டவை என, இரு வகையாக பிரிக்கப்படுகிறது. இவ்விரு வகை பப்பிகளும் என்னிடம் உள்ளன.
அடர்த்தியாக சுருள் சுருளான முடி கொண்ட பப்பிக்கு, குரூமிங் செய்வது சற்று கடினம். ஆனால், இதற்கு முடி உதிர்வு இருக்காது. சீவும் போதும் உதிரும் முடிகளும், காற்றில் பறக்காது. இதன் பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை.
இதன் தோலில் இருந்து, மூன்று அடுக்குகளாக முடி இருப்பதால், தண்ணீரிலே நீந்தினால் கூட, ஈரப்பதம் தோலில் படாது. எல்லா தட்பவெப்ப சூழலிலும், இதை வளர்க்கலாம். இதை அடிக்கடி குளிப்பாட்ட வேண்டியதில்லை.
இங்கிலாந்தில், வயல்வெளிகளில் உள்ள எலிகளை வேட்டையாட, இந்த இன பப்பியை பயன்படுத்துகின்றனர். இதன் முகத்தில் தாடி வளர்ந்திருக்கும். சிறிய விலங்குகளை வேட்டையாடும் போது, முகத்தில் காயம் ஏற்படாமல் இது தடுக்கிறது.
வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில், இப்பப்பி காணப்படும். கிட்டத்தட்ட, 14-16 இஞ்ச் உயரம் வளரும். அதிகபட்சம், 15 கிலோ எடை கொண்டது. இதற்கு, கமர்ஷியல் அல்லது வீட்டிலே சரிவிகித உணவு தயாரித்தும் வழங்கலாம். குறைந்த எடையே இருப்பதால், நகத்தை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். அதீத சுறுசுறுப்பாக இருக்கும். பயிற்சி அளித்து தான், இதை வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. எதையும் எளிதில் கற்று கொள்ளும்.
இது புத்திசாலி என்பதோடு, சூழலுக்கு ஏற்ப தாமே முடிவெடுக்கும் திறனை கொண்டுள்ளது. உரிமையாளர் என்ன சொன்னாலும் கேட்கும். ஒரு வயதுக்கு மேல், இதன் சேட்டைகள் முற்றிலும் குறைந்து அமைதியாகிவிடும். தேவையில்லாமல் குரைப்பது, தாவுவது, வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது சுட்டித்தனமாக நடந்து கொள்வது போன்ற சேட்டைகள் செய்யாது. இது குழந்தைகளிடம் எளிதில் நெருங்கிவிடும். சிறிய இடத்திலும் இப்பப்பியை வளர்க்கலாம். எங்கு வேண்டுமானாலும் உடன் கொண்டு செல்லலாம்.
சில இனங்களை போல, இதற்கு மரபு ரீதியான நோய்கள் எதுவும் வராது. இதன் பெற்றோர், அதன் ஆரோக்கியம் பார்த்து, பப்பியை வாங்குவதோடு, அதை நன்கு பராமரித்தால், சராசரி ஆயுட்காலத்தை தாண்டியும், உங்கள் மேல் அளவில்லாத அன்பை பொழியும் என்றார்.