/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'காவி பொறியாளரின்' ஆன்மிக, மக்கள் சேவை
/
'காவி பொறியாளரின்' ஆன்மிக, மக்கள் சேவை
ADDED : பிப் 22, 2026 06:30 AM

ஆன்மிகம் மூலம் கடவுளிடம் நெருங்குவதை போல் பல்வேறு சேவைகளால் மக்கள் மனதிலும் இடம் பிடிக்கும் ஆன்மிகவாதிகள் சிலர் மட்டுமே. அந்த வரிசையில் போற்றத்தக்கவர் தேனி மாவட்டம் குச்சனுாரை சேர்ந்த பொறியாளர் 'சனீஸ்வர பக்தர்' ராஜேந்திரன்.
ஆன்மிகத்துடன் கல்வி முதல் மகளிர் மேம்பாடு வரை ஆர்வம் காட்டி சுறுசுறுப்பாக சேவை பயணம் மேற்கொண்டுவரும் அவர், தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம்...
கோவையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். தந்தை திருமலைசாமி, சிவபக்தர். அவரது வழிகாட்டுதலில் வளர்ந்ததால் பள்ளிக் காலம் முதல் சிவன் மீது தீராத பக்தி உண்டு. இடையில் வைணவத்திலும் ஈடுபாடு ஏற்பட்டு ஏழு ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு சேவையாற்றினேன்.
நீராதாரம், சுற்றுச்சூழல் அறிவியலில் எம்.இ., படித்துவிட்டு எம்.பி.ஏ.,யும் முடித்துள்ளேன். கட்டுமானத் துறையில் 'கன்சல்ட்டிங்' செய்து கொண்டே எனக்கு பிடித்த ஜோதிடத்தையும் கேரள முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளேன். திருச்சூர் கிருஷ்ணமூர்த்தி தான் என் ஜோதிட குருநாதர். குருவாயூர் மேல்சாந்தி நாராயணமூர்த்தி ஆசீர்வாதம் கிடைத்து, அவரையும் குருவாக கொண்டுள்ளேன்.
ஆன்மிக பற்றால் ஹரித்துவார், ரிஷிகேஷ், கேதர்நாத்தில் செயல்படும் திருநால்வர் மடங்களில் சிதம்பரசுவாமியுடன் இணைந்து அந்த மடங்களின் நிர்வாகத்தை எட்டு ஆண்டுகள் நடத்தி வந்தேன்.
நான் சனீஸ்வரரின் தீவிர பக்தர். 33 ஆண்டுகளாக தொடர்ந்து அவரை வழிபட்டு வருகிறேன். குச்சனுாரில் ஒருநாள் வழிபடும்போதும் பகவான் அசரீரி கேட்டு ஓராண்டுக்கு முன் கூழையனுார் என்ற இடத்தில் ஸ்ரீ சனீஸ்வரா அறக்கட்டளையை அரசு அனுமதியுடன் துவக்கினேன்.
இந்த அறக்கட்டளை மூலம் மகளிர் மேம்பாடு, வசதி இல்லாத மாணவர்களுக்கு கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன், அரசு வனப்பகுதியை பாதுகாக்கும் அலுவலர்கள், முதியவர்களுக்கான நலன்சார் சேவைகளை முடிந்தளவு செய்து வருகிறேன்.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் அதற்கு தொண்டு செய்யும் வகையில் மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறையுடன் இணைந்து மொழிசார் விழிப்புணர்வு, ஆன்மிகம் கலந்த தமிழ் கலாசார, பண்பாடு போற்றும் சொற்பொழிவுகளாற்றி வருகிறேன்.
தற்போது தேனி, மதுரையில் செயல்படும் அறக்கட்டளையின் கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன். இதன் மூலம் ஆன்மிக சேவை, பொதுநல சேவை விரிவடையும்.
'நஞ்சில்லா விவசாயம்' குறித்து அறக்கட்டளை சார்பில் பல்வேறு கிராமங்களில் எங்களின் உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இயற்கை உரமே ஆரோக்கியம் காக்கும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். விவசாயக் கல்லுாரிகளுக்கு சென்று மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கை விவசாய கண்காட்சிகளும் நடத்தி வருகிறோம்.
நாங்கள் விழிப்புணர்வு சேவைக்காக யாரிடமும் நன்கொடையும் பெறுவதில்லை. கட்டுமானம் கன்சல்ட்டிங், ஜோதிடத்தில் எனக்கு கிடைக்கும் வருவாயை இதற்காக செலவிடுகிறேன். சனீஸ்வரா அறக்கட்டளையை உலகம் முழுவதும் விரிவாக்கி, சிவ, சனீஸ்வர பக்தர்களுக்கு வயிறார உணவு அளிப்பது, மகளிர் மேம்பாடுக்கான கல்வி ஆகியவற்கை இலக்காக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.
தொடர்புக்கு: 74188 89162

