அசர வைக்கும் துப்பறியும் சூரன்: அதிரடிக்கு முன் செல்லும் வீரன்
அசர வைக்கும் துப்பறியும் சூரன்: அதிரடிக்கு முன் செல்லும் வீரன்
ADDED : நவ 01, 2025 06:58 AM

இந்திய ராணுவத்தில், மோப்பநாய் பிரிவில் பணிப்புரிந்து ஓய்வு பெற்றவர் சண்முகம். தற்போது காரைக்குடியில், 'ஜெய்போர்ஸ் கே9' (Jey force k9 ) என்ற பெயரில், நாய்களுக்கான பயிற்சி பள்ளி நடத்தி வரும் இவர், செல்லமே பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:
உத்திரபிரதேச மாநிலம், மீரட்கான்ட் பகுதியில் உள்ள ஆர்.வி.சி., சென்டர் மற்றும் கல்லுாரியில், இந்திய ராணுவத்தின், மோப்ப நாய் பிரிவுக்கான, பிரத்யேக பயிற்சி மையம் செயல்படுகிறது. பெல்ஜியம் மெலன்வா, ஜெர்மன் ஷெப்பர்டு, லே ப்ரடார், நம் நாட்டு இன நாய்களான கோம்பை, சிப்பிப்பாறை, முதொல் ஹவுண்ட் இனத்தை சேர்ந்த, 500-700 வரையிலான நாய்களுக்கு, ராணுவ பணிகளுக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இங்குள்ள நாய்களை, நம் நட்பு நாடுகளுக்கு அவ்வப்போது பரிசளிப்பதும் உண்டு. பர்மா, லெபனான் நாடுகளுக்கு, மோப்ப நாய்களை பரிசளித்த போது, அங்குள்ள வீரர்களுக்கு, பயிற்சி வழங்க, நான் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 24 ஆண்டுகள், ராணுவத்தில் மோப்ப நாய் பிரிவில் பணிப்புரிந்தேன். பொதுவாக, நான்கு வகையான பணிகளுக்கு, நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கண்டறிதல்
அதீத மோப்பசக்தி இருப்பதால், நாய்களுக்கு சில நிமிடங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டிய போதைப்பொருட்களின் வாசனையை நுகர செய்வோம். பின்தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தினால், அதே வாசனை எங்கு வந்தாலும் அடையாளம் காட்டி கொடுத்துவிடும். விமானநிலையம், ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மிக குறைவான நேரத்தில், போதை பொருள் வைத்திருக்கும் இடம் அல்லது நபரை அடையாளம் காட்டிவிடும். 10 ஆயிரம் பேர் கூடியிருந்தாலும், பத்து நிமிடங்களே எடுத்து கொள்ளும்.
பாதுகாப்பு பணி
ராணுவ எல்லைப்பகுதி, தளவாடங்கள் இருக்குமிடம், ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் மாளிகையை காவல் காப்பது என, பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தீவிரவாதிகள் இருக்குமிடம் தெரியவரும் சூழலில், அவர்கள் விட்டு சென்ற பொருட்களை அடையாளம் காட்டி, நாய்களின் கழுத்தில் கேமரா மாட்டி, அப்பகுதியில் களமிறக்கப்படும். அவை குறிப்பிட்ட நபரை அடையாளம் கண்டதும், அவ்விடத்தை விட்டு நகராமல் சிக்னல் கொடுக்கும். உடனே ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்த ஆயத்தமாவர். என்னதான் தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும், அதிநவீன கருவிகள் இருந்தாலும், திடீரென அவை பழுதானால், வீரர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
திருடர்களை காட்டி கொடுக்க
சந்தேக நபர்களை அடையாளம் காட்டி கொடுப்பதில், நாய்கள் கில்லாடி. சின்ன அதிர்வுகளையும் உள்வாங்கி செயலாற்றும் திறன் கொண்டவை. மனிதர்களின் இதயத்துடிப்பு வேகமானால், நாய்களுக்கு தெரிந்துவிடும்.அவை சந்தேகித்து தாக்க முற்பட்டாலே, குறிப்பிட்ட நபர் உயிருக்கு பயந்து ஓட ஆரம்பிப்பார்.
மீட்பு பணிகள்
நாய்கள் மனிதர்களுடன் சேர்ந்தே வாழ்வதால், அவைமனித உடலின் வாசனையை எளிதில் கண்டுபிடித்துவிடும். பேரிடர் சமயங்களில், இடுபாடுகளில் புதையுண்டவர்களை மீட்பது எளிதான காரியமல்ல. மோப்ப நாய்கள் எங்கு மனித உடல்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக காட்டி கொடுத்துவிடும். இதனால், குறுகிய காலத்திற்குள் மீட்பு பணிகளை துரிதப்படுத்த முடிகிறது.
இப்படி, நாட்டின் உச்கப்பட்ச பாதுகாப்பு அமைப்பில், மோப்ப நாய்களின் பங்கு அளப்பரியது. ராணுவத்தை பொறுத்தவரை, அசாதாரண சூழலில், முதற்கட்ட தாக்குதலை சுதாரித்துவிட்டால், மரணங்களை தடுக்கலாம்.மோப்பநாய்களை களத்திற்கு அனுப்பினால், எதிராளியின் கவனம் திசை திரும்பும் போது, நம் ராணுவ வீரர்களால், அடுத்தகட்ட நகர்வை, எளிதில் கணித்து செயலாற்ற முடிகிறது. நாய்களுக்கான அதீத திறமை, ஆற்றலை, சரியாக பயன்படுத்துவது மிக அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

