ADDED : ஜூலை 18, 2025 10:01 PM

''பெயருக்கு ஏற்றார்போல, பிரிட்டிஷ் நாட்டு அரண்மனைகளிலும், பங்களாக்களிலும், செல்லப்பிராணியாக வளர்ந்த பப்பி இனம் தான், இந்த கவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல்,'' என்கிறார் கோவையை சேர்ந்த ப்ரீடர் மகேஷ்.
இவர் 'செல்லமே' பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:
இது, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த சிறிய வகை நாய். உடல் முழுக்க மென்மையான முடிகளுடன், தொங்கும் காது, நீண்ட மூக்கு, பெரிய, வட்டமான கண்கள் என, பார்க்கவே பொம்மை மாதிரி இருக்கும்.
அதிகபட்சம் 40-43 செ.மீ., உயரம், 8 கிலோ வரை எடை கொண்டது. இதன் சராசரி ஆயுட்காலம் 9-14 ஆண்டுகள். நன்கு பராமரித்தால், அதிக ஆண்டுகள் உயிர்வாழும்.
வீட்டிற்குள் சிறிய இடத்திலும் இதை வளர்க்கலாம். சுறுசுறுப்பாக இருப்பதோடு, தன் இருப்பிடத்தை எப்போதும் கண்காணித்து கொண்டே இருக்கும். இதன் அனுமதியின்றி யாரும் வீட்டிற்குள்ளே நுழைய முடியாது.
உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை வளர்த்தால், எப்போதும் விளையாடி கொண்டே இருக்கும். இதை எங்கே வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
அதிக முடி இருப்பதால், தினசரி சீவி விடுவது அவசியம். அனைத்து தட்பவெப்ப சூழலையும் தாங்கி கொள்ளும். வீட்டிற்குள் இருக்கவே அதிகம் விரும்பும்.
இது புத்திசாலியான பப்பி என்பதால், எதையும் எளிதில் கற்று கொள்ளும். உங்களின் வாழ்வியல் முறைக்கேற்ப அதற்கு பயிற்சி வழங்கலாம்.
ஸ்பானியல் இன குழுவை சேர்ந்த இப்பப்பியை பிரிட்டன் மன்னர் இரண்டாம் சார்லஸ், செல்லப்பிராணியாக வைத்திருந்ததால் தான், இதற்கு கவாலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல, 18ம் நுாற்றாண்டில், லண்டனில் உள்ள மார்ல்பரோ பகுதியை ஆட்சியை செய்த ஜான் சர்ச்சில், சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட கிங் சார்லஸ் ஸ்பானியல்களை, வேட்டையாடுவதற்கு வைத்திருந்தார் என வரலாற்று ஆசிரியர் டியூக் பதிவு செய்துள்ளார்.
இப்பப்பி பற்றிய வரலாற்று குறிப்புகள் நிறைய இருப்பதால், இப்போதும் பிரிட்டனில் இந்த வகை ஸ்பானியல்களை பலரும் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். கண்காட்சிகளில் இந்த வகை பப்பிகளே அதிகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.