ADDED : மே 10, 2025 07:58 AM

''ஒவ்வொரு முறை 'கேக்' தயாரிக்கும் போதும் தனக்கும் வேண்டுமென்ற முகபாவனையோடு, என் பப்பி அடம்பிடிக்கும். அதற்கு பிடித்த பொருட்களை கொண்டு கேக் தயாரித்து ஊட்டிய போது விரும்பி சாப்பிட்டது. நண்பர்களின் வீட்டு செல்லப்பிராணிகளுக்கும் செய்து கொடுக்கிறேன், '' என்கிறார், சென்னையை சேர்ந்த, தி கேக் கெமிஸ்ட்ரி (The Cake Chemistry) நிறுவனர் டாக்டர் அர்ஷியா.
பல் மருத்துவரான இவர், கொரோனா சமயத்தில், கேக் தயாரிக்க கற்று கொண்டு தற்போது, நமக்கு மட்டுமல்ல, செல்லப்பிராணிகளுக்கும் கேக் தயாரித்து விற்கிறார். இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
கேக், பிஸ்கட், ட்ரீட்ஸ் என செல்லப்பிராணிகளுக்கு, பேக்கிங் முறையில் சில நொறுக்கு தீனிகளை தயாரித்துக்கொடுப்பதன் வாயிலாக, அவற்றிற்கு பல்வேறு சத்துகள் கிடைக்கும். சாப்பிடாமல் அடம் பிடிக்கும் போதும், உத்தரவுக்கு கீழ்படியும் போதும் நொறுக்கு தீனி கொடுப்பதால், அவை சுறுசுறுப்பாக இருக்கும். வாரத்திற்கு இரு முறை கொடுத்தால் போதும்.
பப்பியாக இருந்தால் எட்டு வாரத்திற்கு பின் இதை பின்பற்றலாம். பப்பிக்கு பிடித்த காய்கறிகள், பழங்கள் கொண்டே கேக், பிஸ்கட் தயாரிக்கலாம். இதுபோன்ற உணவுகளை புதிதாக அறிமுகப்படுத்தும் போது சிறிதளவு சாப்பிட கொடுத்து, 24-48 மணி நேரம் வரை, அதன் உடலியல் மாற்றங்களை கவனிக்க வேண்டும். இச்சமயத்தில், சாப்பிடாமல் இருந்தால், உடல் கழிவை வெளியேற்ற சிரமப்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, மீண்டும் அதை கொடுக்காமல் இருப்பதே நல்லது.
செல்லப்பிராணிகளுக்கான கேக் கொடுக்கும் போது, 100 கிராம் அளவே போதுமானது. இதில், எந்த ரசாயன பொருட்களும் இல்லாததால், ப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை, சிறிது சிறிதாக கொடுக்கலாம். உங்கள் செல்லத்துக்கு பிடித்த பழங்கள், காய்கறிகள் கொண்டு கேக் செய்வதற்கான எளிய ரெசிபி இதோ:
பனானா கேக்
ஒரு வாழைப்பழம், ஒரு கப் கோதுமை மாவு அல்லது ஓட்ஸ் மாவு, கால் கப் சர்க்கரை சேர்க்கப்படாத பீனட்பட்டர், ஒரு டீ ஸ்பூன் பேக்கிங் பவுடர் எடுத்து, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இட்லி மாவு பதத்திற்கு, இக்கலவையை கிளறிய பின், ஓவனில், 150 டிகிரி செல்சியஸில், 20 நிமிடங்கள் வரை வைக்கவும். கேக் தயாரானதும், உங்கள் பப்பிக்கு பிடித்த காய்கறி, பழங்கள், பிஸ்கட் ஆகியவை கொண்டு அலங்கரித்து, கேக் தயாரிக்கலாம்.
இதை குக்கரில் செய்வதாக இருந்தால், அடியில் கல் உப்பு சிறிது துாவி, ஒரு வளையத்தை குக்கருக்குள் வைக்க வேண்டும். அதன் மேல் கேக் கலவை இருக்கும் பாத்திரம் வைத்து, விசில் போடாமல் மூட வேண்டும். 10 நிமிடம் குறைந்த தீயிலும், பின் 20 நிமிடம் வரை, அதிக தீயிலும் வைத்தால், கேக் வாசம் வீடு முழுக்க வீசும்.