'ஆமை புகுந்த வீடு...' இனி, ஆனந்தமே! சொல்கிறார் ராம்
'ஆமை புகுந்த வீடு...' இனி, ஆனந்தமே! சொல்கிறார் ராம்
ADDED : அக் 18, 2025 09:24 AM

விரும்பத்தகாத நபர் ஓரிடத்தில் நுழைந்து ஏதாவது சம்பவம் நிகழ்ந்துவிட்டால் உடனே சிலர்... 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என, கமென்ட் அடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், ஆமை வளர்ப்பதால் வீட்டில் ஆனந்தம் நிரம்பி வழியும் என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ராம்.
'மை ஆமை ஷாடோ' (My Aame Shadow) என்ற பெயரில், ஆமை வளர்ப்பு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் இவர் கூறியதாவது:
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 'ரெட் இயர் ஸ்லைடர்' இன ஆமை வளர்க்கிறேன். பிறந்து இரு வாரங்களே ஆன ஆமைக்குட்டிகளை வாங்கினேன். இதற்கு தற்போது ஒன்றரை வயது. ஒவ்வொரு நாளும், இதனிடம் காணப்படும் பரிணாம வளர்ச்சி, உணவு தேடும் விதம், விளையாடுவது, வித்தியாசமாக ஒலி எழுப்புவதை, வீடியோவாக வெளியிடுகிறேன். கால்நடை மருத்துவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை பதிவேற்றுகிறேன். ஏனெனில் ஆமை மிகவும் சென்சிட்டிவானது. இதை வளர்ப்பது, எளிதான காரியமல்ல என்ற புரிதலை ஏற்படுத்துவதற்காக தான்.
ஆசைக்காக ஆமை வாங்கி, ஓரிரு ஆண்டுகள் வளர்த்த பிறகு, அதை பராமரிக்க முடியாமல், பலரும் குளத்தில் விட்டுவிடுகின்றனர். இது முற்றிலும் தவறான செயல். ஏனெனில் இரண்டு வயது கொண்ட ஒரு ஆமையால் அக்குளத்தில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிட முடியும். ஆமை வளர்க்க முடிவெடுத்தால், அதன் பராமரிப்புக்கு மெனக்கெட வேண்டியிருக்கும். அதன் சின்ன சின்ன அசைவுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நீரிலும் நிலத்திலும் இது வாழும் என்பதால், இருவிதமான அமைவிடத்தை ஏற்படுத்தி தர வேண்டும். ஆமையின் நீளத்தை விட ஆறு மடங்கு நீளம், அதன் உயரத்தை விட மூன்று மடங்கு அகலம் கொண்ட தொட்டியில் இதை வளர்த்தால் தான், அது குஷியாக விளையாடும். நீருக்குள்ளே அவை ஒளிந்திருக்க, மறைவான இடம் அமைத்து தருதல், தொட்டியின் மேற்புறத்திற்கு ஏற சாய்தளம், தண்ணீருக்குள் ஒரே அளவில் வெப்பநிலையை தக்க வைக்க 'ஹீட்டிங் ராடு', ஆமையின் ஓட்டிற்கு தேவையான வெப்பத்திற்கு யு.வி., லைட் பொருத்துதல், தொட்டி தண்ணீரின் கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்ற சுத்திகரிப்பான் என, பிரத்யேக 'செட்-அப்' இருப்பது அவசியம்.
தினசரி 20 நிமிடம் சூரிய ஒளியில் ஆமையை காட்டினால் தான், அதன் ஓடு கடினத்தன்மை பெறும். தொட்டியின் தண்ணீர் சுத்தமாக இருந்தால் தான், ஆமை ஓட்டின் நிறம் மாறாமல் இருக்கும். இதன் வளர்ச்சிக்கு, புரோட்டீன் நிறைந்த உணவுகளே சாப்பிட தர வேண்டும். 'விட்டமின்- ஏ' நிறைந்த பழங்கள், காய்கறிகள் சாப்பிட கொடுக்கலாம்.
ஆமையால் நிலத்திலும் வாழ முடியும் என்பதால், சில சமயங்களில் தொட்டியில் இருந்து குதித்து வெளியேறிவிடும். அப்போது, ஏதேனும் பூச்சி கடித்துவிட்டால், வீக்கம், வலியால் அது அவதிப்படும். ஆமையின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தால், உடனே கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். இப்படி ஆமை வளர, தகுந்த சூழல், சத்தான உணவு, பராமரிப்பில் கவனம் செலுத்தினால், அவை 20-30 ஆண்டுகள், உங்களை சுற்றி வலம்வரும். வளர்ப்போருக்கும் ஆனந்தம் அள்ளித்தரும், என்றார்.