ADDED : நவ 23, 2024 06:54 AM

''வெளிநாடுகளில், செல்லப்பிராணி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். அமெரிக்காவில் மட்டும், செல்லப்பிராணிகளுக்கான பேஷன் சார்ந்த மார்கெட்டிங் என்பது, 4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இக்கலாசாரத்தின் சாயல் இங்கேயும் தொடங்கி, பரவி வருவதால், உணவு, பேஷன், பொழுதுபோக்கு விஷயங்கள் மூலமாக, செல்லப்பிராணி வளர்ப்பவர்களின் தேடலுக்கு மேடை அமைத்து தருகிறோம்,'' என்கிறார், '19-டாக்ஸ்' நிறுவனர் கவிபிரியா.
சென்னையை சேர்ந்த கவிபிரியா, அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில், எம்.பி.ஏ., முடித்துள்ளார். செல்லப்பிராணிகளுக்கான பேஷன், உணவு, பொழுதுபோக்கு துறைகளில், தனி முத்திரை பதித்து வரும் இவர், செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை:
செல்லப்பிராணிகள் குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. சந்தோஷம், துக்கம், சோகம், அழுகை, வெறுமை, தனிமை என, ஒரு தனிநபரின் எல்லா உணர்வுகளையும், எந்த ஒளிவுமறைவுமின்றி அதனிடம் வெளிப்படுத்தலாம். நம் மனநிலைக்கேற்ப, செல்லப்பிராணிகள் நடந்து கொள்வதால், அதன்மீது அளவுக்கடந்த அன்பை செலுத்துகிறோம். அதை அழகுப்படுத்தி, கொண்டாட வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. இது தான், பேஷன் மார்கெட்டிற்கான தேவையை ஏற்படுத்துகிறது.
பப்பிக்கோ, பூனைக்கோ, ஆடை அணிவிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் வசிப்போர், தன் ஆடைக்கேற்ற கலரில், டிசைனில் செல்லப்பிராணிக்கும் ஆடை வாங்கி, அணிவித்து, வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது, போட்டோ எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, நினைவுகளாக பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இது ஒருவகையில், செல்லப்பிராணி மீதான, தம் காதலை வெளிப்படுத்தும் அடையாளமாகவே மாறிவிட்டது.
இந்தியாவிலும், மும்பை, கோல்கட்டா, டில்லி போன்ற பெருநகரங்களில் வசிக்கும், இன்றைய இளைய தலைமுறையினர், குழந்தைபேறுக்கு முன்பு, ஒரு செல்லப்பிராணியை தத்தெடுத்து, வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இக்கலாசாரம் பரவலாகும் சமயத்தில், பேஷன் துறையில் கால்பதிக்க முடிவெடுத்தேன். ஓராண்டில் மட்டும், 7 ஆயிரம் 'ஹாப்பி கஸ்டமர்'களை, சம்பாதித்து இருக்கிறோம். வித்தியாசமான சிந்தனையில், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து செயல்பட்டால், செல்லப்பிராணிகளுக்கான உலகளாவிய சந்தையில், நிச்சயம் ஜொலிக்கலாம்.