ADDED : நவ 01, 2024 11:32 PM

''நந்தவனத்திற்குள் நுழைந்து, பட்சிகளின் குக்கூ சத்தத்தில், விளையாட வா என கைபிடித்து அழைக்கும் முயல்களுடன் துள்ளி, பப்பிகளை கொஞ்சிவிட்டு, மீன் கூட்டத்திற்கு உணவளித்து, புதுவிதமான அனுபவத்தை பெற இங்கே வரலாம் ,'' என்கிறார், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள 'பீக்கு பார்க்'- ன் பறவை பராமரிப்பாளர் சவுந்தரபாண்டியன்.
அவர் கூறியதாவது:
கொரோனா சமயத்தில் தான், இயற்கையுடன் இணைந்து வாழ்வது பற்றிய புரிதல் பலருக்கும் ஏற்பட்டது. அச்சமயத்தில், வீட்டிற்குள்ளே அடைபட்டு கிடந்ததால், பறவைகள், விலங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில், இந்நந்தவனம், 2020ல் உருவாக்கப்பட்டது. ஆறு மாத கடும் உழைப்புக்கு பின், 'பீக்கு பார்க்' (Peeku Park) உயிர் பெற்றது.
கிட்டத்தட்ட 2 ஏக்கரில், மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகளுடன் நேரம் செலவிடக்கூடிய வகையில், புதுமையான அனுபவம் பெறும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 30 அடி உயரத்தில், வலை போன்ற மூடுதளம் உருவாக்கி, பறவைகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், பிஞ்சர்ஸ், அமேசான் பேரட், காக்டெய்ல், கனுார், காக்கட்டூஸ், மாக்காவ், லோரிகேட்ஸ், மாங் என, 50க்கும் மேற்பட்ட வெரைட்டிகளில், 300க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. இவை, மனிதர்களுடன் நெருங்கி பழகும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
தினசரி காலையில், இவை 'சன் பாத்' எடுத்தபடியே, சுதந்திரமாக சுற்றித்திரியும். மழைக்காலத்தில் பறவைகள் 'ஷவர்பாத்' எடுக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இதை கண்டு ரசிக்க, பார்வையாளர்களுக்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பறவைகளுக்கு, பார்வையாளர்கள் உணவளிக்கலாம்.
பிஞ்சு குழந்தையின் பாதம் போல மிருதுவாக இருக்கும், இதன் இறக்கையை விரித்தபடி, பறந்து வந்து, அலகால் கொத்தி சாப்பிடும் அழகை, கண் குளிர காணலாம். இதை, புகைப்படம் எடுத்து, நினைவுகளாக பதிவு செய்து கொள்ளலாம். பறவைகள் சரணாலயத்திற்குள் நுழைந்தால், உங்கள் இதயம் பறவை போலாகி, கவலைகள் மறந்து, காற்றில் பறப்பதை உணர முடியும்.
இதுதவிர, குட்டீஸ்களின் பேவரட் பப்பிகளான சிட்ஜூ, மின்பின், மால்தீஸ், பூடில், சைபீரியன் ஹஸ்கியும் இருக்கின்றன. இவைகளை மடியில் வைத்து கொஞ்சலாம். நெருப்பு கோழி, ஈமு கோழி, ஆடு, முயல் என ரசிப்பதற்கும், நேரம் செலவிடுவதற்கும் எக்கச்சக்க செல்லப்பிராணிகள் உண்டு.
தண்ணீரை கிழித்து கொண்டு நீந்தும், 'கொய்' இன மீன்களை காண, இரு கண்கள் போதாது. இவைகளுக்கான உணவை பார்வையாளர்களே கொடுக்கலாம். உணவை எடுக்க முந்தி வரும் மீன்கள், உள்ளங்கையை உரசி நீந்தி செல்லும் போது ஏற்படும் உணர்வு அலாதியானது.
இப்படியாக, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஒவ்வொரு நொடியும் ரசித்து, அனுபவித்து, நினைவுகளாய் பதிவு செய்து கொள்ள எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன. பறவைகள், விலங்குகளை எப்படி பராமரிப்பது, வளர்க்கும் முறை, அதன் பிறப்பிடம் குறித்து, பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறோம். இதனால், ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வமாக வந்து, பறவைகளை பற்றிய பல்வேறு விஷயங்களை கற்று செல்கின்றனர். குடும்பத்தோடு, நண்பர்களோடு, இயற்கையை ரசிக்க, புதுவிதமான அனுபவம் பெற விரும்புவோருக்காக, எல்லா நாட்களும் வாசல் திறந்து வரவேற்கிறோம்.
தொடர்புக்கு: 90804 01013/ 99403 08696
சொர்க்கம் இதுதானம்மா..
மேலே கிடையாதம்மா சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா!

