
நினைவுகளின் பொக்கிஷமாக நிற்கும் கடந்தகாலத்தை, 'ப்ரீஸ்' செய்து, எதிர்காலத்துக்கு கடத்தும் கண்ணாடி ஓவியங்கள். இதை டிரெண்டுக்கு ஏற்ப, 'டூடில் ஆர்ட்' மூலம் கற்பனை காட்சிகளையும் பதிவு செய்கிறார், கோவையை சேர்ந்த பிரியதர்ஷினி.
ஐ.டி., நிறுவனத்தில் வேலைபார்த்து கொண்டே பகுதிநேர வேலையாக, டூடில் ஆர்ட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் இவர், செல்லப்பிராணிகளின் ஓவியங்களை தத்ரூபமாக செதுக்கியுள்ளார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்வையிட்ட பின் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பகிர்ந்தவை:சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரைய பிடிக்கும். ஏதாவது கற்பனையாக வரைந்து கொண்டே இருப்பேன். ஐ.டி., துறையில் வேலை பார்ப்பதால், பணிப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு மருந்தாக, ஓவியங்கள் தான் கைக்கொடுத்தன. இதை டூடில் ஆர்ட்டாக வரைந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (sketchbypriya) பதிவிட்டேன்.
பொழுதுபோக்காக செய்த விஷயங்கள், பின்னாளில் பிசினஸாக மாறிவிட்டது. எனக்கு பப்பி பிடிக்கும் என்பதால், செல்லப்பிராணிகளுடனான என் ஓவியத்தில், ஒருவித தனித்துவம் இருப்பதாக பலரும் தெரிவித்தனர். செல்லப்பிராணிகளின் புகைப்படம் கொடுத்து, அதற்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்தால் அதற்கேற்ப, வண்ணங்களை தேர்ந்தெடுத்து, 'தீம்' உருவாக்கி வரைந்து கொடுக்கிறேன்.
செல்லப்பிராணிகளுடன் பேமிலி போட்டோ, அவுட்டிங் செல்வது, பப்பியை கொஞ்சுவது, 'போர்ட்ரைட்' போல போஸ் கொடுப்பது என, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரைந்து, பிரேம் போட்டு அனுப்பிவிடுவேன். இதுதவிர, வேலட் கார்ட், கீ செயின், பிரிட்ஜ் மேக்னெட், ரிட்டன் கிப்ட், டீ-சர்ட் போன்றவற்றிலும், செல்லப்பிராணிகளின் ஓவியம் வரைந்து தருகிறேன். ஒவ்வொரு ஓவியத்தின் பிண்ணனியிலும், செல்லப்பிராணிகளுடனான மறக்கமுடியாத பல நினைவுகளை பதிவு செய்வதால், ஆத்மார்த்தமான உணர்வு ஏற்படுகிறது.

