பப்பியின் மூக்கில் இருக்கு 'ரகசியம்' : உடல்மொழி அறிவது அவசியம்
பப்பியின் மூக்கில் இருக்கு 'ரகசியம்' : உடல்மொழி அறிவது அவசியம்
ADDED : நவ 22, 2025 07:21 AM

ப டித்தது இன்ஜினியரிங். பார்த்தது 'சேப்டி ஆபீஸர்' வேலை. அதுவும் இயந்திரத்தனமாக இருந்ததால் போர் அடித்துப் போய், திடீரென தனக்கென தனிப்பாதையை உருவாக்கி செல்லப்பிராணிகள் பயிற்சியாளராக உருவெடுத்தார், ஜோக்கிம் ராஜ். மலேசியாவில், ஈப்போபேராக் பகுதியைச் சேர்ந்த இவர், அங்கு 'ஜோ டாக் ட்ரைனிங் ஸ்கூல்' (joe dog training school) நடத்தி வருகிறார். உளவியல் ரீதியாக நாய்களின் உடல்மொழி அறிவது எப்படி என்பது குறித்தும், செல்லப்பிராணி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவருடன் ஒரு கலந்துரையாடல்....
நான் பார்த்த வேலை பிடிக்கல. செல்லப்பிராணிகள் சார்ந்த துறையில் பணியாற்ற முடிவெடுத்து உலகளவில் புகழ்பெற்ற, நாய் பயிற்சியாளரான சீசர் மிலன் என்பவரிடம், உளவியல் ரீதியாக நாய்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கற்றுக்கொள்ள அமெரிக்காவுக்குச் சென்றேன். அவரிடம் கற்றதை வைத்தும், எனது தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்டும், பயிற்சி பள்ளியினை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
மனிதர்களாகிய நாம் கண், காது, மூக்கு என, மூன்று புலன் உறுப்புகளை உணர்தலுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால், நாய்களுக்கான முதன்மை புலன் உறுப்பு மூக்கு தான். கண் தெரியாத, காது கேட்காத பப்பியால், தன்னை சுற்றி நடப்பதை, மூக்கு வழியாகவே உணர்ந்து கொள்ள முடியும். மனிதர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, பப்பிகள் நடந்து கொள்வதற்கு காரணம், நம்மிடம் வெளிப்படும் அதிர்வுகளை மூக்கு வழியாக உணர்வதால் மட்டுமே. இத்தன்மை பெரும்பாலான விலங்குகளுக்கு உண்டு. என்னதான் நீங்கள் நாய்களை பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக் கொண்டாலும், உங்களின் இதயத்துடிப்பு, பய உணர்வை அவை எளிதில் கண்டுபிடித்துவிடும்.
எனவே பப்பிக்கு பயிற்சி அளிக்கும் போது மனதளவில் நாம் உறுதியாக இருப்பது அவசியம். அதிக வார்த்தைகள் பேசாமல், கண்களை பார்த்து, சைகை காட்டாமல், தொடாமல் ஒரு பப்பியை, உங்கள் உள்ளுணர்வு மூலமாக வழிநடத்துவதே உளவியல் ரீதியாக, நாய்களை பயிற்சி அளிப்பதன் அடிப்படை.
ஒரு பப்பியை, உங்களுக்கு ஏற்ப மாற்ற முடியாது. ஆனால், அதன் செயல்பாடுகளை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். உலகளவில் தலைசிறந்த பயிற்சியாளர்கள், இம்முறையை தான் கடைபிடிக்கின்றனர்.
எப்போது பயிற்சி துவக்கலாம் ஒரு பப்பி அதிகபட்சம், 10-12 வாரங்கள், அதன் தாயின் அரவணைப்பில் இருப்பது அவசியம். கடிக்காமல் இருப்பது, எதிரிகளிடம் தற்காத்து கொள்வது, இரை தேடுவது போன்றவற்றை, ஒரு தாயைவிட வேறு யாராலும் சொல்லித்தர முடியாது. இதற்கு பின், உங்கள் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்தே, பப்பிக்கு பயிற்சியை துவக்க வேண்டும். அதற்கென பிரத்யேக கூண்டு வைத்திருப்பது மிக அவசியம்.
அக்கூண்டு தான் அதன் வீடு என பழக்க வேண்டும். அவை துாங்கும் போதும், நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதும், கூண்டிற்குள் வைப்பது அவசியம்.
எங்கே அவை மலம், சிறுநீர் கழிக்க வேண்டுமென தினசரி சொல்லித்தர வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்தால் தான், அதன் ஆயுட்காலம் முழுக்க, உங்களுக்கு தொந்தரவு தராமல் வளரும். இக்காலக்கட்டத்தில் கொஞ்சிவிட்டு, அது கடித்தால் அனுமதித்துவிட்டு, பின் பழக்கத்தை மாற்ற வேண்டுமென்றால், சற்று கடினம் தான். இதேபோல, பப்பியின் உடல்மொழியை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
ஆம், அவற்றால் எதையும் வாய்விட்டு சொல்ல முடியாது. ஒவ்வொரு விஷயத்தையும், அவை சில உடல்மொழிகளால் தான் தெரிவிக்கும். அது என்ன சொல்ல வருகிறது என, உரிமையாளரால் புரிந்து கொள்ள முடியாத பட்சத்தில் தான், இடைவெளி உருவாகிறது.
குறிப்பாக எதிலும் நாட்டமில்லாமல் இருத்தல், கூச்ச உணர்வு, சிறிய சத்தத்திற்கே பயப்படுதல், திடீரென பயந்து குரைத்தல் போன்ற அறிகுறிகள், அதன் உடல்மொழியை ஆரம்ப காலத்திலே கண்டறியாததன் விளைவு. இவை, எந்நேரத்திலும் அக்ரசிவ்வாக மாற வாய்ப்புள்ளது. இத்தன்மை இருந்தால், உளவியல் ரீதியாக பயிற்சி அளித்து இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும், என்றார்.

