ADDED : ஆக 22, 2025 11:25 PM

''சிட்டுக்குருவி போல சிறுத்த உடலுடன் மெல்லிய ரீங்காரத்தில் சிறகு விரிக்கும் பிஞ்சர்ஸ் பறவையை பராமரிப்பது மிக எளிது,'' என்கிறார் திருப்பூரை சேர்ந்த, 'சி.எம்., பெட்ஸ் பார்க்' உரிமையாளர் செல்லமுத்து.
இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட பிஞ்சர்ஸ் பறவைகள், 15-30 கிராம் எடை கொண்டது. பார்க்க நம்மூரு சிட்டுக்குருவி போலவே இருக்கும்; நிறைய வண்ணங்களில் இது கிடைக்கிறது. புதிதாக பறவை வளர்க்க நினைப்பவர்கள் பிஞ்சர்ஸ் வாங்கலாம்; ஜோடி, 500 ரூபாய் மட்டுமே. திணை, கம்பு, கீரை விரும்பி சாப்பிடும்.
எந்நேரமும் சாப்பிட்டுக்கொண்டும், சிறகு விரித்து பறந்து கொண்டும், உற்சாகமாக இருக்கும். இதை சிறியதாக இருக்கும் போதே உள்ளங்கையில் வைத்து உணவு கொடுத்து பழக்கினால், உரிமையாளரை எளிதில் அடையாளம் கண்டு வித்தியாசமாக ரீங்காரமிட்டு அழைக்கும்.
பிஞ்சர்ஸில், ஆண் பறவை பாட்டிசைத்து அழைக்கும். பெண் பறவை சத்தம் மட்டுமே எழுப்பும். இது, மிகவும் சென்சிட்டிவ்வான பறவை என்பதால், வீட்டில் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் இதன் கூண்டை வைக்க வேண்டும்.
அதிக குளிர், வெயிலை இப்பறவையால் தாங்கி கொள்ள முடியாது. பருவநிலை மாறும் போதெல்லாம் அதற்கேற்ப கூண்டு இருக்கும் பகுதியில், தட்பவெப்பநிலையை மாற்ற வேண்டியிருக்கும்.
கூண்டு இருக்குமிடத்தில், எலி, பல்லி, எறும்பு ஆகியவை இருந்தாலோ, அதன் சத்தம் கேட்டாலே, இப்பறவை முட்டையிட்டு அடைகாக்காது. தன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக கருதி, புதுவித ஒலி எழுப்பும்.
பிஞ்சர்ஸ் பறவை வளர்க்க விரும்புவோர், ஜோடியாக வாங்குவதே சிறந்தது. இதை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த விரும்பினால், ஆண், பெண் பறவைகளை தனித்தனியாக வைத்து, இனப்பெருக்க காலத்தில் ஒரே கூண்டில் விடலாம்.
கிட்டத்தட்ட, 5-7 ஆண்டுகள் வரை உயிர் வாழும். சிறிய வகை பறவை என்பதால், உங்கள் உள்ளங்கை கதகதப்பில் துள்ளலாடும் அழகை நித்தம் ரசிக்கலாம்.