குரலற்ற ஜீவன்களின் குரல் ஒரு கருணைக்காரனின் போராட்டம்
குரலற்ற ஜீவன்களின் குரல் ஒரு கருணைக்காரனின் போராட்டம்
ADDED : மே 10, 2025 07:59 AM

''ஒரு லாரி முழுக்க சிறிதும் இடைவெளி இல்லாமல், மாடுகளை ஏற்றி செல்லும் போது அடிவயிற்றில் இருந்து 'அம்மா....' என அவை கத்தும் சத்தம், என் மனதை பிசைவது போல இருக்கும். அந்த உணர்வு தந்த வலி தான், விலங்கு நலன் சார்ந்த பல பொது நல வழக்குகள் தொடுத்து, ஆயிரக்கணக்கான ஜீவன்களுக்கு மறுவாழ்வு தர காரணமாக இருந்தது,'' என்கிறார், சென்னையை சேர்ந்த, 'பீப்பிள் பார் கேட்டில் இன் இண்டியா' (People For Cattle in India) அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா.
'செல்லமே' பகுதிக்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
சிறு வயதில் இருந்தே லாரி முழுக்க மாடுகளை ஏற்றி செல்வதை பார்த்திருக்கிறேன். எங்கு அழைத்து செல்லப்படுகின்றன, ஏன் இப்படி கத்துகின்றன என்ற கேள்விக்கு பிறகுதான் விடை தெரிந்தது.
இதை மையப்படுத்தி, 'டாக்குமெண்டரி' படம் எடுக்கும் போதுதான், மாடுகளை வண்டிகளில் ஏற்றி செல்ல பிரத்யேக சட்ட விதிகளை அறிந்து களமிறங்கினேன்.வாகனத்தில் மாடுகளை கொண்டுசெல்லும்போது, ஒரு மாட்டிற்கு 4 சதுர மீட்டர் அளவு இடம் ஒதுக்க வேண்டும். ஒரு லாரியில், 6 மாடுகளுக்கு மேல் ஏற்றக்கூடாது. தேவையான தீவனம், வெயில், மழையால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கூரை இருப்பதோடு, அவற்றின் உடல் தகுதிக்கான கால்நடை மருத்துவரின் சான்றிதழ் தேவை என, விலங்கு வதை தடை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.
இதற்கு மாறாக மாடுகளை ஏற்றி சென்ற 50 லாரிகளை பிடித்து, 2 ஆயிரம் மாடுகளை மீட்டு காப்பகங்களில் வைத்து, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த பிறகே, அளவுக்கதிகமாக மாடுகளை வண்டிகளில் ஏற்றி செல்வது சட்டப்படி குற்றம் என்ற தீர்ப்பு முழுவீச்சில் நடைமுறைக்கு வந்தது. இதேபோன்று ஒட்டகங்களை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. இதைக்குறிப்பிட்டு, 2017ல் பொது நல வழக்கு தொடுத்தேன். சாதகமான தீர்ப்பு வந்தது. அந்த ஆண்டில் 50 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் மீட்கப்பட்டு, ராஜஸ்தான் மற்றும் திருவள்ளூரில் செயல்படும் விலங்குகள் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதேபோன்று, இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், 2014ல், பொது நல வழக்கு தொடுத்ததால், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட பல இறைச்சி கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தடைகளை தாண்டி, ஜீவன்களை காப்பறு றும் போது, அதன் கண்ணில் தெரியும் கருணையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இத்துடன் கோடை, மழைக்காலங்களில் தெருக்களில் சுற்றி திரியும் நாய், பூனைகளுக்கு உணவளிப்பது, தண்ணீர் தொட்டி வைப்பது என முடிந்ததை செய்கிறோம். சில கார்ப்பரேட் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், விலங்கு ஆர்வலர்களும் ஆதரவு தருகின்றனர். எங்கள் அமைப்பில், 190 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். அவர்கள் இல்லாமல், இதெல்லாம் சாத்தியமில்லை. விலங்குகளுக்கு ஆதரவாக சட்டம் துணை நிற்கிறது, என்றார்.