ADDED : ஜன 17, 2026 06:41 AM

சென்னை, மடிப்பாக்கம், 'பாரத மக்கள் சமூக சேவை மையம்' தலைவர் வெண்ணிலா கூறியது:
இந்த உலகிலே கொடூரமான நோய், பசியாகத்தான் இருக்க முடியும். அது, ஒருவரை எந்த நிலைக்கும் தள்ளும். மனிதர்களாகிய நமக்கே இதில் விதிவிலக்கில்லாதபோது, ஐந்தறிவு ஜீவன்களால் என்ன செய்ய முடியும்? தெருக்களில் சுற்றித்திரியும் ஒரு நாய், பூனைக்காவது உணவளிக்க, ஒவ்வொருவரும் முன்வந்தாலே இதை சாதிக்க முடியும்.
அந்த வகையில்தான், என்னால் முடிந்ததை செய்கிறேன். மடிப்பாக்கம் சுற்றியுள்ள 150 நாய்களுக்கு தினமும் உணவு சமைக்கிறேன். நிறைய தன்னார்வலர்கள் பெற்றுச்சென்று தங்களின் தெருக்களில் உள்ள நாய்களுக்கு தருகின்றனர். ஆரம்பத்தில் இந்த வேலை சிரமமாக தான் இருந்தது. ஆனால் சாப்பிட்ட பிறகு, அவற்றின் கண்களில் தெரியும் நன்றி உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
இதோடு, தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய், பூனைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன். சிகிச்சைக்கு பின் பழைய நிலைக்கு திரும்ப முடியாதவை, கால் இழந்தவை, தெருவில் விடப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு, செங்கல்பட்டு அருகே, காப்பகம் நடத்தி வருகிறேன். அங்கே தற்போது 35 நாய்கள் இருக்கின்றன. என் வீட்டில் மட்டும் 30 க்கும் மேற்பட்ட பூனைகள், 6 நாய்கள் இருக்கின்றன.
நான், 'டிராவல்ஸ்' நடத்தி வருவதால், இரு கார்களை மீட்பு பணிகளுக்கே ஒதுக்கிவிட்டேன். என்னால் இயன்றளவுக்கு அடிபட்ட நாய்களை காப்பாற்றி வருகிறேன். பிசினஸில் கிடைக்கும் பணத்தில் பெரும்பங்கை, இதற்கே செலவழிக்கிறேன். இதில் ஓர் ஆத்மதிருப்தி இருக்கிறது. கணவர், மகன், மகள் என குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நண்பர்கள், தன்னார்வலர்கள் என பல தரப்பிலும் ஒத்துழைப்பதால் மட்டுமே இதை செய்ய முடிகிறது. யாராவது செய்யட்டும் என்றில்லாமல், தாமாக முன்வந்து களமிறங்கினாலே, சமூகத்தில் மாற்றம் நிச்சயம் நிகழும், என்றார்.

