ADDED : டிச 06, 2025 09:02 AM

''பப்பி சீரான சுவாசமின்றி வாய் திறந்து மூச்சுவிடுதல், படுக்க முடியாமல் நின்று கொண்டே அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், பாரசிட்டமால், டிக்ளோபினாக் போன்ற மாத்திரைகள் கொடுக்கக் கூடாது,'' என்கிறார், சென்னை, செல்லப்பிராணி மருத்துவர்கள் சங்க தலைவரும், பேராசிரியருமான, ஜி.ஆர்.பரணிதரன்.
செல்லப்பிராணிகளுக்கு நீர்கோர்ப்பு பிரச்னை குறித்து இவர் கூறியதாவது: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காலில் நீர்கோர்ப்பது போல நாய், பூனைகளுக்கும், நுரையீரல், இருதயம், வயிற்றை சுற்றி, சில காரணங்களால், நீர்கோர்ப்பு ஏற்படும். குறிப்பாக, பூனைகள் அதிர்ச்சியடைந்தாலோ, நோய் தொற்று பாதிப்பு இருந்தாலோ, வயிறு, நுரையீரல் சுற்றி நீர்கோர்ப்பு ஏற்படலாம்.
டாபர்மேன், லேப்ரடார் இன நாய்களுக்கு, 'டைலேட்டட் கார்டியோ மயோபதி' (Dilated cardiomyopathy) என்ற இருதய பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதனால், அவைகளுக்கு இருதயம் சுற்றி நீர்கோர்த்து வீங்கியிருக்கும். இதேபோல நாய்களுக்கு, உண்ணிக்காய்ச்சல் ஏற்பட்டால், நுரையீரல், இருதயம், வயிறு ஆகிய மூன்று பகுதிகளிலும் நீர்கோர்க்கலாம். விபத்து நேர்ந்தாலும், இப்பாதிப்புகளுக்கு செல்லப்பிராணிகள் ஆளாகலாம். நீர்கோர்ப்பு இருந்தால், பப்பியால் மூக்கு வழியாக சீராக சுவாசிக்க முடியாமல் திணறும். வாய்விட்டு மூச்சுவிடுதல், தரையில் படுக்க முடியாமல் அவதிப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இச்சூழலில் சிலர், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், பாரசிட்டமால், டிக்ளோபினாக், குரோசின் போன்ற மாத்திரைகள் கொடுத்துவிடுவர். இதிலுள்ள மூலப்பொருட்களை, கல்லீரலால் செரிக்க முடியாமல், ரத்தத்தில் கலந்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். இச்சூழலில் எந்த முதலுதவியும் செய்யாமல், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்தது. வயிறு, நுரையீரல், இருதயம் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள நீரை, கதிர்வீச்சு சிகிச்சை மூலம், குழாய் சொறுகி, தினசரி அதிலுள்ள தண்ணீரை எடுத்த பிறகு, அடுத்தகட்ட சிகிச்சை துவங்கப்படும்.
மூக்கு வழியாக மூச்சுவிட முடியாமல் தவிக்கும், நாய்களுக்கு கழுத்தின் முன்பகுதியில் துளையிட்டு குழாய் நுழைத்து, வெளிப்புற காற்று நேரடியாக நுரையீரலுக்கு செல்ல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இப்படி, பிரச்னையின் தன்மைக்கேற்ப சிகிச்சை முறைகள் மாறுபடும். இப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, உண்ணிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை முறையாக கொடுப்பது, இருதய பாதிப்பு இருக்கிறதா என அவ்வப்போது, பப்பிகளுக்கு பரிசோதனை செய்வது அவசியம். தற்போது செல்லப்பிராணிகளுக்கான பாதிப்புகளுக்கு அதிநவீன சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அறிகுறி தெரிந்தும் அலட்சியமாக இருந்தால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம், என்றார்.

