ADDED : ஜன 18, 2025 07:55 AM

''வளவளப்பாக மின்னும் மேனி, தலைக்கு மேல இரண்டு ஆன்டனா போன்ற, நீண்டு இருக்கும் கண்களோடு, தாவி விளையாடி கொண்டிருந்த, 'பேக்மேன்' என்ற ஒருவகை தவளையை, 2கே கிட்ஸ் விரும்பி வாங்கி சென்று வளர்க்கின்றனர்,'' என்கிறார், கோவை, 'வூப் டேம்டு எக்ஸாடிக் பெட்ஸ்' உரிமையாளர் ராகுல்.
இதெல்லாம்மா வாங்கி வளர்க்க ஆசைப்படுறாங்க என்றதும், அதை ஆமோதிப்பது போல தலையசைத்து, 'பேக்மேன்' பராமரிப்பு பற்றி, நம்மிடம் பகிர்ந்தவை:
பேக்மேன் (Pacman) என்ற தவளை இனம், தென் அமெரிக்கா நாட்டை சேர்ந்தது. இது, முன்பே அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், தற்போது இந்தியாவில் இனப்பெருக்கம் செய்து, விற்கப்படுகிறது. கோல்கட்டாவில் இருந்து, இந்த பேக்மேன் வாங்கி விற்பனைக்கு வைத்திருக்கிறேன்.
இது, மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில், (parivesh.nic.in) சான்றிதழ் பெற்று வளர்க்கலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றிய பிறகே, விற்பனை செய்கிறோம்.
நம் நாட்டு தவளையில் இருந்து, இதன் உடலமைப்பில் சில மாறுபாடுகள் இருக்கும். இதன் உடல் மேல் இரு ஆன்டனா இருப்பது போல, கண்கள் விரிந்திருக்கும். சிறியவகை பூச்சிகள், புழுக்கள், சிறிய வகை மீன்கள், வெட்டுக்கிளியை விரும்பி சாப்பிடும். இதற்கான உணவை, செல்லப்பிராணிகளுக்கான உணவு விற்கும் கடைகளிலே வாங்கி கொள்ளலாம். கிட்டத்தட்ட, 7-10 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
பிறந்து 5 மாதமாக இருக்கும் போதே, கையில் வைத்து உணவு கொடுத்து பழக்குவதால், உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும். இது வாழ, சற்று ஈரப்பதமான இடம் தேவைப்படுவதால், தேங்காய் நார் கொண்டு தயாரிக்கப்பட்ட மூடிய நிலையில் இருக்கும் 'என்குளோசர்' வாங்கி அதனுள் விடலாம். இது, நீண்ட துாரம் உயரே பறந்து தாவாது. வீட்டிற்கு வந்த சில நாட்களிலே, வித்தியாசமான குரல் எழுப்பி, உங்களோடு பேசுவதை உணரலாம்.
பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, மஞ்சள், பழுப்பு நிறத்தில், வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால், எக்ஸாடிக் செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்போருக்கு, இது சிறந்த சாய்ஸாக இருக்கும். '2கே கிட்ஸ்' தான், பேக்மேனின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.