ADDED : ஜன 03, 2026 08:04 AM

புதுச்சேரியில் பி.எம்., அக்வாரியம் நடத்தும் தங்கவேலு, பெரிய வகை மீன்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து பகிர்ந்தவை:
பெரிய வகை மீன்களை சிறிய தொட்டியில் விட கூடாது. குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தலாம். தற்போது, வீட்டின் தரைக்கு அடியில் தொட்டி அமைப்பது, சுவர், மாடிப்படி சுவர்களில் தொட்டி போன்ற இன்டீரியர் அமைப்பை ஏற்படுத்தி, பெரிய மீன்களை நீந்த விடுவது டிரெண்டாக உள்ளது.
அலிகேட்டர் கர் கர் இன மீன்களில், அலிகேட்டர், கியூபர், புளோரிடா, ஸ்பாட்டட் உட்பட, ஏழு வகைகள் இருக்கின்றன. இதில், அலிகேட்டர் கர் இன மீன்கள், பழுப்பு, சாம்பல், வெள்ளை என சில நிறங்களில் காணப்படும். உடல், துடுப்புகளில் கருப்பான புள்ளிகள் அல்லது திட்டுகள் இருக்கும். கோல்டன் அலிகேட்டர் கர் மீன்கள் விலை உயர்ந்தவை. இவை அதிகபட்சம் 6-7 அடி நீளம் வளரும். இதில், ஆண் மீன்களை விட, பெண் மீன்களே நீளமாக வளரும். இவை மாமிச உண்ணிகள். தனியாகவே வளரும். பிற மீன்களை இதன் தொட்டியில் விட்டால், சாப்பிட்டுவிடும். மோட்டார் அமைப்பு தேவையில்லை.
அரபைமா அதிகபட்சம் 10 அடி வரை வளரும். உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்களுள் ஒன்று. உடல் முழுக்க கறுப்பாகவும், மையப்பகுதியில் வெள்ளையாகவும், சிவப்பு நிறத்தில் பெரிய வால் உண்டு. நுரையீரல் போல, பிரத்யேக நீச்சல் பை உள்ளது; 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரின் மேற்பரப்பிற்கு வந்து காற்றை சுவாசித்து கொள்ளும். பிரத்யேகமாக மோட்டார் ஆக்ஸிஜன் பொருத்த தேவையில்லை. இவையும் மாமிச உண்ணிகளே. இவை மீன் இனங்களிலே பழமையானது என்பதால், டைனோசர் மீன் என்றும் கூறுவர்.
ரெட்டெய்ல் கேட் பிஸ் இது பெயருக்கேற்ப சிவப்பு நிற வால் உடன், வெள்ளை நிறத்தில் வயிறு, உடலின் மேற்புறத்தில், கறுப்பு, பழுப்பு போன்ற அடர் நிறங்களில் காணப்படும். தண்ணீரில் ஊர்ந்து செல்லும். அமேசான் நதிக்கரையே இதன் பிறப்பிடம். பகலை விட இரவில் உணவு தேடும். இதற்கான உணர் உறுப்பாக, முகத்தில் மீசை இருக்கிறது. செல்லப்பிராணியாக வளர்க்கும் இவ்வின மீன்களும், இரவில் உணவு சாப்பிடவே ஆர்வம் காட்டும். கிட்டத்தட்ட 6 அடி நீளம் கொண்டது. தனியாக தான் வளர்க்க வேண்டும். தினசரி உணவு அவசியம். இரு நாட்கள் சாப்பிடாவிடில் இறக்க நேரிடலாம், என்றார்.

