இது, 'உதார்' இல்லீங்க... இருக்கு, பறவைக்கும் 'ஆதார்'
இது, 'உதார்' இல்லீங்க... இருக்கு, பறவைக்கும் 'ஆதார்'
ADDED : ஜன 04, 2025 12:45 AM

''நீ எங்கே என் அன்பே... என, கண்கள் சிவக்க, காணாமல் போன திசை நோக்கி, பறவையின் வரவுக்காக காத்திருப்பது வலியின் உச்சம். அதிக விலை கொடுத்து வெளிநாட்டு ரக பறவை வாங்கும் போது அதற்கு ஆதார் இணைக்க மறந்துவிடாதீர்கள்,'' என்கிறார் 'விடை' மருத்துவ ஆய்வக நிறுவனர் தமிழ்மணி.
கோவையில், செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ ஆய்வகம் நடத்தி வரும் இவர், 'எம்.டெக்., மாலிகுலர் மெடிசின்' முடித்துள்ளார். பறவைகளின் அடையாளத்தை பதிவிடுதலின் முக்கியத்துவம் குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பறவைகளின் பாலினம் கண்டறிவதற்கான ஆய்வகங்கள் சென்னை, பெங்களூரு, டில்லி போன்ற பெருநகரங்களில் தான் இருக்கிறது. கோவையை சுற்றி இருப்பவர்களுக்காக இதை துவங்கினேன். முட்டையை உடைத்து பறவை வெளிவரும் போது மெல்லிய லேயர் போன்ற அமைப்பு, அதன் உடலை சுற்றியிருக்கும். இதை தனியாக எடுத்து கொடுத்தால், பரிசோதனைக்கு உட்படுத்தி, 'ஆணா', 'பெண்ணா' என்பதை, உடனே அறியலாம்.
மூன்று மாதங்களில், சிறகு முளைக்க ஆரம்பிக்கும். அப்போது, நெஞ்சுப்பகுதியில் உள்ள ஓரிரு இறக்கை எடுத்து கொடுத்தால், அதிலிருந்தும் அறியலாம். ரத்த மாதிரிகள் மூலமாகவும், பாலினம் அறியலாம். பறவைகளில் ஆண் பறவையாக இருந்தால், 'ZZ' என்றும், பெண்ணாக இருந்தால், 'ZW' எனவும் குறிப்பிடப்படும்.
நிறைய பறவை வாங்கி வளர்ப்பவர்கள், இனப்பெருக்கத்திற்காக பறவை வளர்ப்பவர்கள், அதன் பாலினம் அறிவது அவசியமானது. இதேபோல், நம் விரல் ரேகை, கண் விழி பதிவு வாயிலாக, ஆதார் அடையாள அட்டை வழங்குவது போல, பறவைகளுக்கும் அதன் பாலினம், உரிமையாளர் பெயர், தொடர்பு எண் கொண்ட ஆதார் உருவாக்கலாம். இத்தகவல்களை, ஒரு அலுமினிய வளையத்தில் பொறித்து, பறவையின் காலில் பொருத்திவிடப்படும். பறவை தொலைந்தால், இந்த அடையாளத்தை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம். யாரேனும் களவாடியதாக சந்தேகித்தால், இந்த ஆதார் தகவல்கள் கொண்டு உறுதிப்படுத்தி கொள்ளலாம்.