'பெட்'களுடன் ரயில், விமான பயணம்? அவசியம் அறிய வேண்டிய சேதி
'பெட்'களுடன் ரயில், விமான பயணம்? அவசியம் அறிய வேண்டிய சேதி
ADDED : அக் 04, 2025 05:48 AM

வெளிநாடுகளுக்கு செல்லப்பிராணியை கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் குறித்து, புதுடில்லியில் இயங்கும் 'பெட் மூவர்ஸ்' (Pet Movers) நிறுவன தலைவர் பிஜாய், நம்மிடம் பகிர்ந்தவை:
நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது, செல்லப்பிராணியை எப்படி உடன் கொண்டு செல்வது என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கும். குறுகிய தொலைவுகளுக்கு சொந்த வாகனங்களில் கொண்டு செல்லலாம். அதுவே பொது போக்குவரத்துகளில் கொண்டு செல்ல சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ரயிலில், செல்லப்பிராணியை கொண்டு செல்ல, முதல் ஏசி., கூப்பே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். இருவர், நான்கு பேர் மட்டும் பயணிக்கும் வகையிலான 'கூப்பே' உள்ளன. பயணத்திற்கு முந்தைய நாளில், ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, கூப்பே டிக்கெட் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் அனுப்பப்படும்.
பயணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, பார்சல் அலுவலகத்திற்கு சென்று, செல்லப்பிராணி பயணிக்க தகுதி பெற்றிருப்பதற்கான கால்நடை மருத்துவரின் சான்றிதழ், தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ், உங்களின் பயண டிக்கெட், உங்களின் அடையாள அட்டை சமர்பிக்க வேண்டும்.
கூப்பே கிடைக்காத பட்சத்தில், சரக்கு பெட்டியில், செல்லப்பிராணி மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். இதுபோன்ற சமயங்களில், அடுத்தடுத்து வரும் ஸ்டேஷன்களில், ரயில் நிற்கும் நேரத்தை கணக்கிட்டு, அவ்வப்போது உங்கள் செல்லப்பிராணிக்கு தண்ணீர், உணவு கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
விமானம்
நம் நாட்டை பொறுத்தவரை, விமானத்தில் செல்லப்பிராணியை எடுத்து செல்ல, 'ஏர்லைன்' நிறுவனம் மட்டுமே தற்போது அனுமதிக்கிறது. ஐந்து கிலோவுக்கு கீழ், உங்கள் செல்லப்பிராணியின் உடல் எடை இருக்கும் பட்சத்தில், பிரத்யேக பெட்டியில் வைத்து, நீங்களே உடன் கொண்டு செல்லலாம். இதற்கு மேல் எடை இருந்தால், கார்கோவில் மட்டுமே செல்லப்பிராணியை கொண்டு செல்ல முடியும்.
இதில் செல்லப்பிராணி பயணிக்க, பிரத்யேக கூண்டு வேண்டும். அதற்குள் தண்ணீர், உணவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன், செல்லப்பிராணியின் ஆரோக்கியம் குறித்த கால்நடை மருத்துவரின் சான்றிதழ், தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். கார்கோவில் இருந்து செல்லப்பிராணி விமானநிலையத்தை வந்தடைந்ததும், உரிமையாளருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இவ்விரு வழி பயணங்களிலும், செல்லப்பிராணியின் எடைக்கேற்ப பயணக்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
அனுமதி இல்லை
நீண்ட துார பயணங்களுக்கு, பிறந்து மூன்று மாதங்களுக்கு உட்பட்டவை, கர்ப்பமாக இருக்கும் செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. முன்கூட்டியே பயண திட்டமிடல்கள் மேற்கொள்ள வேண்டும். பயணத்தில் சோர்வின்றி இருக்க, அதிக புரதம் நிறைந்த உணவுகள், தண்ணீர் இருப்பதை உறுதி செய்வது அவசியம். இந்த பயண திட்டமிடல்களுக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள், எங்களை போன்ற அனுபவமிக்க ஏஜென்சிகளை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் 'புரோபைல்' பற்றி தெரிந்து தேர்வு செய்வது அவசியம். நீண்ட துார பயணத்திற்கு பின், உரிமையாளர்களை பார்த்ததும், செல்லப்பிராணிகள் துள்ளி தாவுவதும், அவர்கள் அவற்றை ஆரத்தழுவுவதும், ஒவ்வொரு பயண அனுபவத்திலும் காண முடிகிறது, என்றார்.