ADDED : நவ 09, 2024 09:13 AM

''குட்டியாக இருக்கும் போது, பப்பியின் சேட்டை, குறும்புத்தனத்தை கண்டிக்காமல் இருந்தால், வளர்ந்த பின், அதன் குணாதிசயத்தை மாற்றமுடியாது. முறையாக பயிற்சி அளிக்காவிடில் பப்பியால் உரிமையாளருக்கு கூடுதலாக மன அழுத்தம் உருவாகலாம்,'' என்கிறார் 'டாக் ட்ரைனர்' இன்பராஜ்.
கோவை, பொள்ளாச்சி மற்றும் பெங்களூருவில், 'லியோ டாக் ட்ரைனிங் அகாடமி' நடத்தும் இவர், இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி. நாய்களுக்கு பயிற்சி அளித்தல், அழகுப்படுத்துதலுக்கு (குரூமிங்) பிரத்யேக சான்றிதழ் படிப்பும் முடித்துள்ளார்.
வீட்டிற்கே வந்து பப்பிக்கு குரூமிங் செய்வதோடு, நீங்கள் வெளியூருக்கு சென்றால், பப்பியை பத்திரமாக தங்க வைக்க, பிரத்யேக கென்னல் வைத்துள்ளார். வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பப்பிகளை பழக்கப்படுத்துவது பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பப்பி வாங்கும் போது, உங்களின் தேவைக்கேற்ற, ப்ரீட் தேர்வு செய்வது அவசியம். இதை பிறந்து, 45 நாளில் இருந்தே, சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். இதை சரியாக பின்பற்றினாலே, அதன் பராமரிப்பு விஷயத்தில், பாதி வேலைப்பளு குறைந்துவிடும்.
மூன்று மாதத்தில் தான், நாம் சொல்வதை பப்பிகளால் புரிந்து கொள்ள முடியும். இச்சமயத்தில், அடிப்படை பயிற்சிகளை துவங்கலாம். நில், நட, ஓடு, குதி, உட்கார் போன்ற கட்டளைகளை தாண்டி, உரிமையாளரின் 'லைப் ஸ்டைலுக்கு' ஏற்ப, பப்பியை பழக்குவதே சரியான பயிற்சி முறையாகும்.
வாக்கிங் அழைத்து செல்லும் போது, கட்டாயம் 'லீஸ்' அணிவிப்பதோடு, உங்களுக்கு இடதுபுறம் பப்பி இருக்குமாறு பார்த்து வேண்டும். உரிமையாளர் நடக்கும் போதே, பப்பி ஓடுவது, தாவுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பழக்கப்படுத்த வேண்டும்.
செல்லப்பிராணியாக வளர்க்கும் பப்பியாக இருந்தால், வீட்டிற்கு வருவோரை பயமுறுத்தாமல் இருக்க, 'சோசியலைஸ்' செய்ய வேண்டும். இதற்கு, புதிய இடங்கள், அதிக சத்தம், புதிய நபர்கள், பொருட்களை காண்பித்து, ஒரு மாதம் வரை பழக்கும் பட்சத்தில், எங்கு அழைத்து சென்றாலும், ஆக்ரோஷமாக நடந்து கொள்ளாது.
முதன்முறையாக வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, அச்சூழலால் பப்பிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். திடீரென யாரேனும் கல்லால் அடித்தாலோ, பிற நாய்கள் கடிக்க வந்தாலோ, பயந்துவிடும். பின், வீட்டை விட்டு வெளியே வந்தாலே, பதற்றத்துடன் நடந்து கொள்ளும்.
இதேசமயம், பாதுகாவல் நோக்கத்திற்காக வாங்கும் பப்பியை, வீட்டிலுள்ளோர் தவிர மற்றவர்களிடம் நெருங்கி பழக அனுமதிக்க கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், திருடர்கள் யாரேனும் வந்தால் கூட, குரைத்து காட்டி கொடுக்காமல் இருக்க நேரிடலாம்.
தனிமைக்கு துணையாய், மன அழுத்தத்திற்கு மருந்தாய், வீட்டிற்கு புதுவரவாக வரும் பப்பியை, முறையாக பழக்கத்தவறினால், பின்னாளில் அதை பராமரிக்க முடியாமல், கூடுதலாக மன அழுத்தம் உருவாகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்!