ADDED : மே 25, 2024 09:04 AM

சென்னையில் சிறுமியை, ராட்வீலர் நாய் கடித்த பிறகு, லார்ஜ் ப்ரீட் ஓனர்களை அக்கம்பக்கத்தினர் வித்தியாசமாக நடத்துவதாக, தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இவ்வகை நாய்கள், பிறரை கடிக்காமல் இருப்பதற்கு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப், செயலாளர், சரவணக்குமாரிடம் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பெரிய வகை ப்ரீட் வாங்கும் முன்பு அவை வளர்வதற்கான சூழலை அமைத்து தர முடியுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதன், பராமரிப்பு முறைகளை தெரிந்து கொண்டு, பிறகு வாங்குவதே சிறந்தது. வேக்சினேஷன் முடிந்தபின் மூன்று மாதங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளுக்கு, 'மவுத் கேப்', 'லீஸ்' அணிவித்து பிறருடன் பழகுவதற்கு அனுமதிக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்தாலும், ஸ்ட்ரெஸ் ஆகி, ஆக்ரோஷமாகலாம்.
தற்போது, நிறைய மாடல்களில், 'நெக் லீஸ்', 'பாடி லீஸ்' கடைகளில் கிடைக்கின்றன. அதிக நீளமுள்ள லீஷ் பயன்படுத்தினால், நாயின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். 2 மீட்டர் நீளமுள்ள தோள்பட்டையே சிறந்தது. ஆரம்பத்தில், பப்பியை பழக்கும் போது நெக் லீஸ் மட்டும் அணிவித்தால், அதை இழுக்கும் போது, கழுத்தில் இறுக்கம் ஏற்படலாம். முழு உடலை கட்டுப்படுத்தும் விதமாக விற்கப்படும் பாடி லீஸ்களே சிறந்தது. இதேபோல், வீட்டிற்குள் இருக்கும் போது செயின் மாடல் லீஸ்களை பயன்படுத்தலாம்.
வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் போது, உங்களின் இடதுபுறமாக நாய் இருக்க வேண்டும். அப்போது தான், உங்களின் கட்டுப்பாட்டில், அவை இருக்கும். 'ஒன் அண்டு டூ' ட்ரைனிங் கொடுப்பது போல, பிறரை கண்டால் தாவாமல் இருப்பது அதிக சத்தம் போடாமல் இருத்தல், பிறரை கடிக்காமல் இருக்கவும், பழக்கப்படுத்த முடியும். உங்களின் கட்டளைக்கு கீழ்படியுமாறு, செல்லப்பிராணிகளை பழக்கினாலே, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கலாம்.

