ADDED : ஜன 04, 2025 12:48 AM

''கட்டளைக்கு கீழ்படிய வைப்பது போல, உரிமையாளரின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும் பப்பியை பழக்குவது தான் சிறந்த பயிற்சி முறையாக இருக்கும்,'' என்கிறார், பயிற்சியாளர் ரித்தீஷ்குமார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், 'ஹோல்டு இன் பார்க்ஸ்' (Hold'N Barks) என்ற பப்பி பயிற்சிக்கூடம் நடத்தும் இவர், இத்துறையில் பயிற்சியாளராக விரும்புவோருக்கு, ஆண்டுக்கு இருமுறை வகுப்பு எடுத்து வருகிறார். இவரின், பெல்ஜியம் மலினோய்ஸ் பப்பி கடந்த 2016 ம் ஆண்டிலே, 'ஒபீடியன்ஸ்' மற்றும் 'ப்ரீட்' ஆகிய இருபிரிவுகளிலும், சேம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பப்பியை கையாள முடியுமென்ற உறுதி இருந்தால் பயிற்சியாளராவது எளிது. நீங்கள் சொல்வதை பப்பி புரிந்து செயல்பட வேண்டுமெனில், அதன் உளவியலை புரிந்து கொண்டு பயிற்சி அளிப்பதே சிறந்த வழிமுறை. பப்பி பிறந்து, நான்கு மாதம் முதல் ஓராண்டுக்குள் பயிற்சி அளித்தால், அதன் ஆயுள்வரை, சில குணாதிசயங்களை மாற்றிவிட முடியும்.
பப்பிக்கான பயிற்சி வழிமுறைகளை 10 நாட்களில் கற்று கொண்டு களத்தில் குதிக்கலாம். ஆனால், நண்பர்கள், உறவினர்களின் பப்பிக்கு பயிற்சி கொடுத்து சில அனுபவங்களை பெற்றால் தான், முறையான பயிற்சியாளராக உருவாக முடியும். சில கட்டளைகளை சொல்லி பப்பி அதை செய்தால் பாராட்டி உணவு கொடுப்பது, அல்லது அதற்கு தேவையான வேறு ஒன்றை தந்து ஊக்கப்படுத்துவதை பலரும் பின்பற்றுகின்றனர். இது சரியானது தான்.
ஆனால், எப்போதும் கட்டளைகளை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது. ஒரு பப்பியால், தன்னை சுற்றி நிகழும் சம்பவத்தின் அடிப்படையில் செயலாற்ற முடியும். சில விஷயங்களை சொல்லாமலே செய்ய வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் பாராட்டி கொண்டே இருக்கக்கூடாது.
என்னதான் செல்லப்பிராணி என்றாலும், உங்களுக்கும், பப்பிக்கும், ஒரு இடைவெளி இருப்பது அவசியம். இல்லாவிடில், அது நமக்கு சேவகம் செய்யும் நிலை மாறி அதுவே எஜமான் என்ற நிலையை அடைந்துவிடும். அச்சூழல் வந்தால், தன்னிடம் இருக்கும் பலத்தை வெளிக்காட்டி யாரையும் நெருங்கவிடாமல் செய்துவிடும்.
ஒருமுறை துபாயில், பயிற்சி வகுப்பு கையாள சென்றபோது, அங்குள்ள மக்கள், செல்லப்பிராணிகளிடம் நடந்து கொள்வதை கவனித்தேன். அவர்கள், பெரிய வகை பப்பியாக இருந்தால், 'லீஷ்' அணிவித்தும், சிறிய வகை பப்பியாக இருந்தால், கையில் துாக்கி கொண்டும் தான், பொது இடங்களுக்கு செல்கின்றனர். பப்பியை, லீஷ் அணிவிக்காமல் எங்கும் கொண்டு செல்வதில்லை.
இதை நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம். வீடு, தோட்டம் என குறிப்பிட்ட எல்லையில் லீஷ், பெல்ட் அணிவிக்க தேவையில்லை. பொது இடங்களில், அப்படியே பப்பியை கொண்டுவந்தால், அதன் பின்னால் நாம் ஓட வேண்டியிருக்கும்.
பப்பியின் அன்றாட செயல்பாட்டில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் தான், அது உரிமையாளரின் தேவையை நிறைவேற்றும். இதற்கு பழக்குவது தான் சிறந்த பயிற்சியாளருக்கான தகுதியாக இருக்கும்.
தொடர்புக்கு: hoholdnbarkdogtraining@gmail.com

